சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் கரோனா நோய்க் கிருமி குறித்து விழிப்புணர்வு நடன நிகழ்ச்சியும், சிறப்பு மருத்துவ முகாமும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரயில்வே எஸ்பி மகேஸ்வரன், பயணிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கினார். அதன்பின்னர் மருத்துவ முகாமை பார்வையிட்ட அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, “தினமும் அனைத்து ரயில்களிலும் கரோனா நோய்க் கிருமி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ரயில் நிலையங்களில் வரும் பயணிகளுக்கு உடற்சூட்டை கண்டறியும் கருவியைக் கொண்டு சோதனை செய்யப்படுகிறது.
மேலும் கைகளை சுத்தமாக வைத்திருக்க சொல்லியும், முகக் கவசங்களை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இதனிடையே வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய ரயில்களில் முழுமையாக பரிசோதனை செய்யப்படுகிறது. அதில் ஏதேனும் பயணிகளுக்கு உடல்நலக் குறைவு கண்டறியப்பட்டால் சுகாதாரத்துறை மூலம் அவர்களை தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது.
மேலும், எழும்பூர் ரயில் நிலையத்தை பொறுத்தவரை ஏழு நுழைவாயில்கள் உள்ளன. அவை அனைத்தும் சோதனை செய்யப்படுகிறது. அதேபோன்று சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருக்கக்கூடிய நுழைவாயில்களிலும் சோதனை மேற்கொள்ளப்படுகிறது” என்றார்.