சென்னை: பள்ளிக்கரணையில் உள்ள தனியார் கூரியர் நிறுவனத்தில் வந்த பார்சலை ஸ்கேன் செய்தபோது ஒரு பார்சலில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், கிண்டி காவல் உதவி ஆணையரின் தனிப்படை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் அந்த பார்சலை சோதனையிட்டதில், அவை கள்ளநோட்டுகள் என தெரியவந்தது.
ஹைதராபாத்தில் இருந்து சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த சதீஷ் என்பவருக்கு அந்த பார்சல் வந்ததை அறிந்த போலீசார், வேளச்சேரிக்கு சென்று சதீஷைப் பிடித்து வந்து விசாரணை செய்தனர். பட்டதாரியான சதீஷ், டிசைனராக பணியாற்றி வருகிறார். கடந்த 4 வருடமாக சரியாக வேலைக்கு செல்லாமல் அவருடைய மனைவியின் வருமானத்தில் காலத்தை ஓட்டியதும் விசாரணையில் தெரியவந்தது.
மேலும், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் தேடியபோது, இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பக்கத்தை பாலோ செய்தபோது, ரூ.50 ஆயிரம் கொடுத்தால் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் தரப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நண்பர்களிடம் கடன் வாங்கி, அவன் கூறிய வங்கி கணக்கில் செலுத்தி முதலில் 2 ஆயிரம் ரூபாய் செலுத்தி 6 ஆயிரம் ரூபாய் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளாக கூரியர் மூலமாக வரவழைத்து சிறு கடைகள் மற்றும் மதுபான கடைகளில் புழக்கத்தில் விட்டுள்ளார். தொடர்ந்து பணத்தை புழக்கத்தில் விடும்போது எவ்வித சிக்கலும் வராததால் இதனை மீண்டும் செய்ய எண்ணியுள்ளார்.
அதன்படி தற்போது, மீண்டும் அந்நபரை தொடர்புகொண்டு 6 ஆயிரம் ரூபாய் செலுத்தி 18 ஆயிரம் ரூபாயை கூரியர் மூலமாக வரவழைத்தபோது சிக்கிகொண்டதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும், விரைவில் பணக்காரனாக வேண்டும் என்ற ஆசையில் 3 லட்ச ரூபாய்க்கு வங்கியில் லோன் வாங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டதும்; இதே போல் 3 லட்சத்தை கொடுத்து 9 லட்சம் ரூபாய்க்கு கள்ள நோட்டுகளை வாங்குவதற்கு திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது.
மேலும் ஹைதராபாத்தைச் சேர்ந்த சுஜீத் என்பவர் மூலமாக இந்த பணப்பரிவர்த்தனை மேற்கொண்டதும், தன்னைப் போலவே தமிழகத்தில் இருந்து பலர் சுஜித்திடம் இந்த பணப்பரிவர்த்தனையில் ஈடுப்பட்டு வருவதாகவும், சென்னையில் மட்டுமே 5-க்கும் மேற்பட்டோர் சுஜித்தோடு தொடர்பில் இருப்பதாக விசாரணையில் ஒப்புக்கொண்டார்.
100, 200, 500 ரூபாய் கள்ள நோட்டுகள் அச்சு அசல் ரூபாய் நோட்டுகள் போலவே இருப்பதாகவும், 100 மற்றும் 200 ரூபாய் கள்ளநோட்டுகள் என்பதால் எளிதாக மாற்ற முடியும் என்பதால் அவற்றை மட்டும் கேட்டு வாங்கியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 13 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் ஹைதராபாத்தை சேர்ந்த சுஜீத் என்பவனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவனை கைது செய்தால் பெரிய கள்ளநோட்டு கும்பலை பிடித்துவிடலாம் என போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: இமாச்சல பிரதேசத்தில் மாதுளை பழ பெட்டிகளில் வெட்டப்பட்ட ரூபாய் நோட்டுகள்... போலீஸ் விசாரணை