சென்னை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செப்.13ஆம் தேதி சட்டப்பேரவையில், ”கூட்டுறவு வங்கிகளில் ஐந்து சவரன் வரை பெறப்பட்ட நகைக்கடன் தகுதியின் அடிப்படையில் தள்ளுபடி செய்யப்படும்” என அறிவித்தார். அதனடிப்படையில், இன்று(நவ.1) ரூ.6,000 கோடி கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அரசாணையில், கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெற்ற நகைக்கடனுக்கான அசல், வட்டியை அரசு ஏற்கிறது. இதனால் அரசுக்கு ரூ.6,000 கோடி செலவாகும். இதன் மூலம் 16 லட்சம் பேர் பயனடைவர். குறிப்பாக 2021 மார்ச் 31ஆம் தேதி வரை வழங்கப்பட்ட நகைக்கடன் மட்டும் தள்ளுபடி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாருக்கெல்லாம் தள்ளுபடி இல்லை
அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் நகைக்கடன் பெற்றுள்ளவர்கள், எந்த பொருளும் வாங்காத குடும்ப அட்டைதாரர்கள் ஆகியவர்களுக்கு நகைக்கடன்கள் தள்ளுபடி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தவறான தகவல்களை கொடுத்து நகைக்கடன் பெறுபவர்களுக்கும் தள்ளுபடி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தவறான தகவல் கொடுத்து நகைக்கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி நிறுத்திவைப்பு - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்