சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், விசாரித்துவருகிறது. இந்த ஆணையத்திற்கு ஏற்கனவே வழங்கியதுபோல் முழு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அப்போலோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்களது கோரிக்கையை ஏற்று, மருத்துவ வல்லுநர்கள் கொண்ட குழுவை விசாரணை குழுவில் அமைப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
56 மருத்துவர்கள் ஆஜர்
உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் நடுநிலையோடும், துல்லியமாகவும், முறைப்படியும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். ஆகவே, முன்பைப் போல தொடர்ந்து எங்களது முழு ஒத்துழைப்பை கொடுப்போம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், டிசம்பர் 2016ஆம் ஆண்டுமுதல் இன்றுவரை 56 அப்போலோ மருத்துவர்கள், 22 துணை மருத்துவ மற்றும் துணைப் பணியாளர்கள் அப்போலோ மருத்துவமனைகளில் ஆணையம் முன் ஆஜராகி, வாய்மொழி ஆதாரங்களைச் சமர்ப்பித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கருணாநிதியின் நிழல் சண்முகநாதன் மறைவு: ஸ்டாலின் அஞ்சலி