சென்னை: சென்னை செனாய் நகரில் புஹாரி ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. கடந்த 18 ஆம் தேதி வாடிக்கையாளர் குமரன் என்பவர் தனது நண்பர்களுடன் உணவருந்த சென்றுள்ளார். அப்போது சிக்கன் பிரைடு ரைஸ் ஆர்டர் செய்தார். ஆனால் அந்த ரைசில் கண்ணாடித் துண்டுகள் இருந்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து உணவக மேலாளர் மற்றும் ஊழியர்களிடம் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்பு செய்தியாளர்களை சந்தித்த குமரன், தனது நண்பருக்கு ஏதாவது ஒன்று நேர்ந்தால் அதற்கு உணவக நிர்வாகமே பொறுப்பு எனவும், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை வேண்டியும் புகாரும் அளித்திருந்தார்.
இச்சம்பவம் அந்த உணவகத்தின் வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், புகாரின் அடிப்படையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்மந்தப்பட்ட புகாரி உணவகத்தில் சோதனை மேற்கொண்டு எச்சரிக்கையும் விடுத்துச் சென்றனர்.
இந்நிலையில் குமரன், ஹோட்டல் மேலாளரிடம் தனியறையில் வைத்து கண்ணாடி துண்டுகள் இருந்த உணவை சாப்பிட்டதால், தனது நண்பருக்கு வயிற்றில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டிருந்தால் யார் பொறுப்பேற்பது என பேசியதோடு 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் நாங்களே மருத்துவ செலவை பார்த்து கொள்கிறோம் எனவும், அல்லது அதற்குண்டான மருத்துவ செலவை நீங்களே பார்த்து கொள்ளுங்கள் எனவும் நியாயம் கேட்டுள்ளார்.
அப்போது அவரை சமாதானம் செய்ய உணவக மேலாளரும், ஊழியர்களும் முயன்றுள்ளனர். பின் இதையெல்லாம் சும்மா விடக்கூடாது என தொடர்ந்து பேசி வந்த குமரன், திடீரென சரி விடுங்க கோவிலுக்கு நன்கொடையாக ஒரு 5 ஆயிரம் ரூபாய் குடுங்க எனக் கூறி தனது நண்பரிடம் பில் புக்கை எடுத்து வர கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: நகராட்சி நிர்வாகமே சாலை ஆக்கிரமிப்பில் ஈடுபடுவதாக கூறி பொதுமக்கள் போராட்டம்...