ஊரடங்கால் உணவகங்களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை சரி செய்ய பார்சல் உணவுகளின் விலையை வியாபாரிகள் உயர்த்தி விற்பனை செய்வதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இது தொடர்பாக வழக்கறிஞர் ராம.சிவசங்கர் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், உணவகங்களையே நம்பி வாழும் இளைஞர்களுக்கும், குடும்பத்தினருக்கும் விலையேற்றம் கூடுதல் கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதால், இது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி ஏப்ரல் 12ஆம் தேதி அரசுக்கு மனு அனுப்பியும், எந்த நடவடிக்கையும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, உணவகங்களில் குறைந்த விலையில் பார்சல்களை விற்பனை செய்வதை உறுதிபடுத்துமாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும், அருகில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு உணவகங்கள் இலவசமாக உணவுகளை வழங்க அறிவுறுத்தல் வழங்கவும் அரசுக்கு உத்தரவிடக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் நிர்மல்குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: ரமலான் நோன்புக்காக இலவச அரிசி - தடைக்கோரி இந்து முன்னணி வழக்கு!