பிரெஞ்ச் ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரியின் விடுதலைக்காக போராடிய, சுதந்திர போராட்ட வீரர்களுக்கு தியாகிகள் பென்ஷன் வழங்குவது தொடர்பாக 1970ஆம் ஆண்டு விதிகளை வகுத்த புதுச்சேரி அரசு, அதற்கான திட்டம் கொண்டுவந்தது. அதன்படி, 1986ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன்பு விண்ணப்பித்தவர்களுக்கு மட்டும் தியாகிகள் பென்ஷன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
புதுச்சேரி விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட முத்தையன் என்பவர், தியாகிகள் பென்ஷன் வழங்கக் கோரி 1996ஆம் ஆண்டு விண்ணப்பித்தார். ஆனால், தியாகிகள் பென்ஷன் விதிகளின்படி, குறித்த காலத்தில் விண்ணப்பிக்காமல், 10 ஆண்டுகள் தாமதமாக விண்ணப்பித்ததாக கூறி, அவரது மனுவை புதுச்சேரி அரசு நிராகரித்தது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முத்தையன் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், தியாகிகள் பென்ஷன் விதிகளில், பென்ஷன் கோரி விண்ணப்பிக்க எந்த காலக்கெடுவும் விதிக்கவில்லை என்றும், காலக்கெடு நிர்ணயிக்க முதலமைச்சர் தலைமையிலான குழு பரிந்துரைத்தும், எந்த திருத்தமும் செய்யவில்லை என்றும் கூறி, முத்தையனின் விண்ணப்பத்தை நிராகரித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும், அவரது விண்ணப்பத்தை மறுபரிசீலனை செய்து, விசாரணை நடத்தி மூன்று மாதங்களில் சட்டப்படி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என, புதுச்சேரி அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.