சென்னை சின்னமலையைச் சேர்ந்தவர் பிரின்சி மார்டின் (67). இவரது கணவர் மார்டின் தொழிலதிபராக உள்ளார். இவருக்கும் வடசென்னை துணை ஆணையர் (டிராபிக்) ஷியாமலா தேவிக்கும் திருமணம் தாண்டிய உறவு இருப்பதாகவும், அதனால் ஷியாமலா தேவி தங்கள் குடும்ப விவகாரங்களில் தலையிட்டு குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் கூறி சென்னை காவல் ஆணையரிடத்தில் பிரின்சி மார்டின் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரின்சி மார்டின், "என் கனவர் ஒரு தொழிலதிபர். அவருக்கு தஞ்சாவூரில் நான்கு அக்காக்கள் இருக்கின்றனர். அதில் கடைசி அக்கா காவலராக இருந்து ஓய்வுபெற்றவர். அவரால் நான் பெரும் துயரங்களை அனுபவித்து இருக்கிறேன். அதன்பிறகு நானும், எனது கணவரும் சொந்தமாக உழைத்து நல்ல நிலைமைக்கு வந்துள்ளோம்.
இந்நிலையில் சென்னையில் துணை ஆணையராக பணிபுரியும் ஷியாமலா தேவிக்கும் எனது கணவருக்கும் திருமணம் தாண்டிய உறவு ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூரில் இருக்கும் எனது கணவரின் சகோதரிகள் வீட்டில் என்னை விட ஷியாமலா தேவிக்கு அதிக மரியாதை கொடுக்கப்படுகிறது.
மேலும், எங்களின் பள்ளி பாதிரியரை சந்தித்து என்னை பற்றி அவதூறு கூறுகிறார். எங்கள் குடும்ப விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று ஷியாமலாவிடம் கூறினால், உங்கள் கணவனை கண்டித்து வையுங்கள் என்று கூறுகிறார். ஆனால் பள்ளி பாதிரியாரிடத்தில், எனக்கும் மார்டினுக்கும் இடையே தந்தை மகள் உறவுதான் என்று திரித்து கூறுகிறார்.
இதற்கிடையில் ஷியாமலாவின் பணியிடம் சேலத்துக்கு மாற்றப்பட்டது. ஆனால் அவர் குறுகிய காலத்தில் மீண்டும் சென்னைக்கு வந்து எங்களுக்கு தொல்லை கொடுத்து வருகிறார். தற்போது வடசென்னை துணை ஆணையராக (டிராபிக்) காவல்துறையில் பணிபுரிகிறார். ஷியாமலாவுக்கும் கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். அவரின் கணவரை சந்தித்து இவை அனைத்தையும் கூறினேன்.
அவரும் மனைவியை பற்றி தெரிந்தும் எதுவும் கேட்காமல் இருக்கிறார். ஷியாமலா குழந்தைகளை கவனிப்பதில்லை, மார்டின் கால் செய்தால் வெளியே சென்றுவிடுவதாக குற்றம்சாட்டுகிறார்.
அதனால் ஷியாமலா அவரோடு நெருங்கி பழகி வருகிறார். எங்கு சென்று அவர்மீது புகார் கொடுத்தாலும் தன்னுடைய அதிகார பலத்தை வைத்து அதை தடுத்து வருகிறார். தற்போது அவர்மீது காவல் ஆணையரிடத்தில் புகார் அளித்துள்ளேன். முறையான விசாரணை நடத்தி என் கணவரை என்னிடம் ஒப்படைக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.