சென்னை: மழைக்காலம் முடிந்து வெயில் காலம் தொடங்குவதற்கு முன் கொசு மற்றும் கொசு புழு உற்பத்தி அதிக அளவில் இருக்கும். குறிப்பாக சென்னையைப் பொறுத்தவரையிலும் ஆற்றங்கரை ஓரத்தில் குடிசைப் பகுதிகளிலும் கொசு அதிக அளவில் உருவாகிறது. இதனால் டெங்கு, மலேரியா போன்ற பல்வேறு நோய்களால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
கொசு மற்றும் கொசு புழுவை அழிப்பதற்காகவும், கொசுக்களால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த தீவிர கொசு ஒழிப்புப் பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. இந்த கொசுக்களை ஒழிப்பதற்காக 3 ஆயிரத்து 463 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
புகைபரப்பும் பணிகள்
இந்தப் பணியாளர்களின் மூலம் 57 வாகனங்களில் பொருத்தப்பட்ட புகைபரப்பும் இயந்திரங்கள், கையினால் கொண்டு செல்லும் 251 புகைபரப்பும் இயந்திரங்கள் மற்றும் 9 சிறிய வகை புகைபரப்பும் இயந்திரங்களைக் கொண்டு நாள்தோறும் குடிசைப்பகுதிகள் மற்றும் கொசுக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் புகைபரப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதுமட்டுமின்றி பராமரிக்கப்பட்டு வரும் நீர்வழிக்கால்வாய்களில் கொசுப்புழுக்களின் உற்பத்தியை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்த 224 கைத்தெளிப்பான்கள், 371 பேட்டரி மூலம் இயங்கக்கூடிய கைத்தெளிப்பான்கள் மற்றும் 129 விசைத்தெளிப்பான்கள் ஆகியவற்றின் மூலம் கொசுக்கொல்லி மருந்து தெளிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
ட்ரோன் இயந்திரம் மூலம் கொசு மருந்து
நீர் வழிக்கால்வாய்களில் கொசு மருந்து தெளிக்கும்போது ஏற்படுகின்ற நடைமுறை சிக்கல்களைக் கருத்தில்கொண்டு கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு வான்வழி வாகன கழகத்துடன் இணைந்து சோதனை முறையில் ட்ரோன் இயந்திரங்களைப் பயன்படுத்தி கொசு மருந்துகள் தெளிக்கப்பட்டன.
மாநகரின் பல்வேறு பகுதிகளில் அதிகளவு கொசுக்கள் இருப்பதாகப் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் மீண்டும் ட்ரோன் இயந்திரங்களைக் கொண்டு நீர்வழிக் கால்வாய்களில் கொசு மருந்து தெளிக்கும் பணியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது.
கொசுத்தொல்லை தாங்க முடியவில்லை
பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தாலும் கொசுத்தொல்லை இருந்துகொண்டேதான் இருக்கிறது. புகை மருந்து அடிக்கும் நேரத்தில் மட்டும் கொசுத் தொல்லை சற்று குறைகிறது. மீண்டும் இரவு நேரங்களில் கொசுத்தொல்லையானது அதில் தொடங்குகிறது என பக்கிங்காம் கால்வாய் அருகில் வசிக்கும் மக்களும், அடையாறு கரையோரம் வசிக்கும் மக்களும் குற்றம்சாட்டுகின்றனர்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக பேசிய துணை மேயர் மகேஷ் குமார், "கொசு மற்றும் கொசுப் புழு உற்பத்தியை ஒழிப்பதற்குப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக மேயர் தலைமையில் ஆலோசனைக் கூட்டமும் நடைபெறுகிறது.
பூச்சி வல்லுநர்களிடம் ஆலோசனை
நீர் நிற்காதவாறு ரோபோட்டிக் இயந்திரம் வைத்து தொடர்ந்து திட்டுகளை சரிசெய்து வருகிறோம். பூச்சி வல்லுநர்களை அழைத்து திட்டப்பணிகள் குறித்து பேசியிருக்கிறோம். பணிகள் தொடங்கிவிட்டன. விரைவில் கொசுக்களை ஒழிப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இதுபோன்று கொசு மருந்து தெளிப்பது முதலியவை ஆற்றங்கரை ஓரத்தில் மக்கள் வசிக்கும் இடங்களில் தெளிக்கப்படுகிறது. அதற்குப்பிறகு அனைத்து வகையான மக்களுக்கும் உதவும் வகையில் செயல்பட்டு வருகிறது. மூன்று, நான்கு மாதங்களில் முழுமையாக கொசுக்களை கட்டுப்படுத்தி விடுவோம்" எனத் தெரிவித்தார்.
மாநகராட்சி பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்தாலும்; கொசு இல்லாத சென்னை என்ற நிலைக்கு வரவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: VideoLeak:பட்டியலின மாணவனை அதிக கட்டணம் செலுத்தக் கூறி பேரம் பேசிய தாளாளர்