தமிழ்நாட்டிலுள்ள தனியார் பொறியியல், மருத்துவம், சட்டம், பாலிடெக்னிக் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான ஆண்டுக் கட்டணம் சுயநிதி தொழிற்கல்வி நிறுவனங்களின் கட்டண நிர்ணயக் குழுவால் நிர்ணயம் செய்யப்படுகிறது. இக்குழு நிர்ணயம் செய்யும் கட்டணம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றப்படும்.
இந்நிலையில், 2017-18ஆம் கல்வியாண்டுக்குப் பிறகு, 2020-21ஆம் கல்வியாண்டுக்கான புதிய கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டியுள்ள சூழலில், இக்குழுவின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி வெங்கட்ராமன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இது குறித்து தனியார் சுயநிதி தொழிற்கல்வி கட்டண நிர்ணயக் குழு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”2020-21ஆம் ஆண்டில் இளங்கலை மற்றும் முதுகலை பொறியியல் பாடப்பிரிவுகள், எம்பிஏ, எம்சிஏ பாடப்பிரிவுகள், உணவக மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப பட்டயப் படிப்புகள், இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவம், பல்மருத்துவ பாடப்பிரிவுகள், இளங்கலை மற்றும் முதுகலை சட்ட பாடப்பிரிவுகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.
இந்தப் பாடப்பிரிவுகளுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்ய சம்பந்தப்பட்ட கல்லூரிகளிடமிருந்து கருத்துகள் பெறப்பட்டு 2020-21ஆம் ஆண்டு வகுப்புகள் தொடங்குவதற்கு முன் கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்யப்படும். சம்பந்தப்பட்ட கல்லூரிகளின் வரவு செலவு கணக்குகள், தணிக்கையாளரின் வரவு, செலவு அறிக்கை, வங்கிக் கணக்குகள் அடிப்படையில் கட்டணம் நிர்ணயம் செய்யப்படும் “ எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஐடிஐ தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்த வேண்டும் - தமிழச்சி தங்கபாண்டியன்