சென்னை: இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் கரோனா தொற்றின் மூன்றாம் அலை உச்சம் பெற வாய்ப்புள்ளதாகத் தேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.
இதனிடையே தமிழ்நாடு, பஞ்சாப், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளைத் திறப்பதற்கான ஆயத்தப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுவருகின்றன.
தமிழ்நாட்டில் செப்டம்பர் ஒன்றாம் தேதிமுதல் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் தனித்தனியே வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, கல்லூரி மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளில், குறிப்பாக மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
தடுப்பூசி செலுத்தாத பேராசிரியர்கள், பணியாளர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவர். தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு அந்தந்தக் கல்லூரிகளிலேயே தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்றாம் அலையில் பள்ளி திறப்பு
தற்போது இந்தியாவில் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது. ஆனால், தேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனம், அக்டோபர் மாதம் உச்சம் பெறும் கரோனா தொற்றின் மூன்றாம் அலை பெரியவர்களுடன் சேர்த்து சிறுவர்களையும் அதிகளவில் பாதிக்கும் எனக் கூறியுள்ளது.
எனவே அனைத்துக் குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அரசுக்குப் பரிந்துரைசெய்யப்பட்டுள்ளது. இதனிடையே, பாரத் பயோடெக் நிறுவனம், 2-18 வயதினருக்கான தடுப்பூசி பரிசோதனையில் ஈடுபட்டுவருகிறது.
கல்லூரிகளில் மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டியது கட்டாயம் என்ற நிலையில், பள்ளிகளில் ஆசிரியர்கள், பணியாளர்கள் மட்டும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்பது குழப்பத்தை ஏற்படுத்தும்படி உள்ளது. எனவே சிறுவர்களுக்குத் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்ட பின்னர் பள்ளிகளைத் திறப்பது நல்லது என்று மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: 3ஆம் அலை: வீட்டுக்கு சென்று தடுப்பூசி