சவுதி ஏர்லைன்ஸ் விமானம் கடந்த 18ஆம் தேதி ஜெட்டாவில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. இந்த விமானத்தில் சென்னையைச் சேர்ந்த 35 வயது பெண் பயணி ஒருவர், தஞ்சாவூரைச் சேர்ந்த 38 வயது கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் உள்பட 239 பயணிகள் பயணித்துக் கொண்டிருந்தனர். இவர்கள் இருவரும் ஜெட்டாவில் பணியாற்றுகின்றனர். இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, கல்லூரிப் பேராசிரியர் சென்னை பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதை அந்த பெண் கண்டித்து அவரை எச்சரித்தார்.
ஆனாலும் அவர் தொடர்ந்து சில்மிஷம் செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சென்னை பெண், விமான பணிப்பெண்களிடம் புகார் செய்தார். விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.விமானி சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இந்நிலையில் சவுதி ஏா்லைன்ஸ் விமானம் 18ஆம் தேதி சனிக்கிழமை சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கியது.
உடனடியாக சவுதி ஏர்லைன்ஸ் ஊழியர்கள் உதவியுடன், சென்னை பெண், தஞ்சாவூா் பேராசிரியரை சென்னை விமான நிலைய காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று புகார் செய்தார். சென்னை விமானநிலைய காவல்துறையினர் விசாரணையில், தூக்கக்கலக்கத்தில் தெரியாமல் என் கை பட்டு விட்டது. என்னை மன்னித்து விடுங்கள் என்று பேராசிரியர் மன்னிப்பு கேட்டுள்ளார். இதையடுத்து அந்தப் பெண் புகாரை திரும்பப் பெற்றுக்கொண்டார்.
இதனையடுத்து காவல்துறையினர் இருவரையும், சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.இதற்கிடையே சென்னை பெண் தனக்கு விமானத்தில் நடந்த சம்பவம் பற்றி, தனது டிவிட்டர் பக்கத்திலும் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்த செய்தி ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் வெளியாகியது. இதனையடுத்து பெண்கள் அமைப்புகள் உட்பட பல்வேறு அமைப்புகள் கடுமையாக இதை எதிர்த்து விமர்சனம் செய்தன.
பெண்ணை இழிவு படுத்தியவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தின.இந்நிலையில் சென்னை பெண் மீண்டும், கடந்த 22 ஆம் தேதி சென்னை விமான நிலைய காவல்நிலையத்திற்கு வந்தது, மீண்டும் தஞ்சாவூா் பேராசிரியர் மீது புகார் செய்தார். இதையடுத்து காவல்துறையினர் புகாரை பெற்றுக்கொண்டு, பேராசிரியர் மீது 354 A, (பாலியல் தொல்லை கொடுத்தது), 509 IPC( பெண்களை இழிவுபடுத்துவது) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து செய்தனர்.
அதோடு தஞ்சாவூரைச் சேர்ந்த பேராசிரியரைக் கைது செய்ய தேடிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் பேராசிரியர், நேற்றிரவு அவர் தரப்பு வழக்கறிஞர்களுடன் வந்து,சென்னை விமான நிலைய காவல்நிலையத்தில் ஆஜரானார். காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். அவா் ஏற்கனவே கூறிய பதிலான, தூக்கத்தில் கை தெரியாமல் பட்டுவிட்டது.நான் வேண்டுமென்று தவறு செய்யவில்லை என்று கூறினார்.
ஆனால் காவல்துறையினர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏற்கனவே போட்டிருந்த வழக்கு பிரிவுகளில்,பேராசிரியரை கைது செய்தனர். அதன் பின்பு காவல்துறையினர், தஞ்சாவூா் பேராசிரியரை, காவல்நிலைய ஜாமீனில் விடுவித்தனர். இனிமேல் இந்த வழக்கு, நீதிமன்றத்தில் நடக்கும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஷேர்சாட் மூலம் பழகிய சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர் - போக்சோவில் கைது