இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குர் பூரணச்சந்திரன் மண்டல கல்லூரி இணை இயக்குநர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "தமிழ்நாடு முதலமைச்சர், 2020 மார்ச் 20ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில், உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதம் மேலும் உயர்த்தப்படும் என தெரிவித்தார்.
கிராமப்புற மாணவர்கள் பயன்பெற உயர்கல்வித் துறை மூலம் ஏழு புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும். வரும் கல்வியாண்டு முதல் இக்கல்லூரிகள் செயல்படும்.
அதனடிப்படையில், கோயம்புத்தூர் மாவட்டம் புளியங்குளம் பகுதியில் ஒரு அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியும், மற்ற ஆறு கல்லூரிகள் இருபாலர் அரசு கலை அறிவியல் கல்லூரிகளாக தொடங்கப்பட உள்ளது.
பிஏ தமிழ், பிஏ ஆங்கிலம், பிஎஸ்சி கணக்கு, பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.காம் ஆகிய ஐந்து பாடப்பிரிவுகள் தொடங்கப்படும்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், கோயம்புத்தூர் மாவட்டம் புளியங்குளம், கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம், விழுப்புரம் மாவட்டம் வானூர் ( திருசிற்றம்பலம் கூட்டு சாலை), விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம், ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஜம்புகுலம் இவர்களில் தொடங்கப்பட உள்ளது.
2020- 21 ஆம் கல்வி ஆண்டில் கல்லூரிகள் தொடங்கி மாணவர்கள் சேர்க்கை பணிகள் இந்த கல்வி ஆண்டிலேயே நடத்தப்பட உள்ளது.
எனவே இந்த ஏழு மாவட்டங்களில் பொருத்தமான அரசு கட்டடம் அல்லது வாடகை கட்டடங்களை தேர்வுசெய்து கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்" என அதில் கூறியுள்ளார்.