சென்னை: ஒஎம்ஆர் சாலை, துரைப்பாக்கத்தில் உள்ள பிரபல உணவகத்தில் நேற்று (ஏப். 9) தம்பதி சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டபோது, அதில் கரப்பான் பூச்சி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உணவக மேலாளரிடம் கேட்டதற்கு, அவர் பேசி சமாதானம் செய்ய முற்பட்டார். இருப்பினும் தம்பதி உணவு பாதுகாப்புத் துறைக்கு புகார் அளித்தனர். அதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த உணவு பாதுகாப்பு அலுவலர் சுகுமார் சோதனையில் ஈடுப்பட்டார்.
இந்த சோதனையில், உணவக சமயலறையில் விதிமுறைகள் பின்பற்றாமல், அசுத்தமான நிலையிலேயே உணவு சமைக்கப்பட்டுவந்ததும், குறிப்பாக அங்கே கரப்பான் பூச்சிகள் சுற்றித்திரிந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
அதனடிப்படையில் 3 நாள் உணவகத்தை மூட அலுவலர் உத்தவிட்டார். அத்துடன் சமையலறையை முறையாக சுத்தம் செய்த பின்னரே திறக்க வேண்டும் என்று எச்சரித்தார். இதனிடையே உணவகத்தில் சமைத்து வைக்கப்பட்டிருந்த பிரியாணி குப்பையில் கொட்டப்பட்டது. உணவகத்திற்கு 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அண்மை காலமாக சென்னையில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிப்ஸ் சாப்பிட்டு, டயட் கோக் குடித்த வருவாய் அலுவலக ஊழியர் மரணம்