சென்னை: தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்து தற்கொலை செய்துக்கொள்வது தொடர் கதையாகி வருகிறது. இதனால் இந்த விளையாட்டை தடை செய்யக்கோரி தமிழ்நாடு அரசிடம் அரசியல் கட்சி தலைவர்களும், பொதுமக்களும் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து இருந்தனர்.
இதனையடுத்து ஆன்லைன் ரம்மியின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு தலைமையிலான குழு அமைத்தது தமிழ்நாடு அரசு. அக்குழுவில் ஐஐடி தொழில்நுட்ப வல்லுநர் டாக்டர் சங்கரராமன், ஸ்னேஹா அமைப்பின் நிறுவனரும் உளவியலாளருமான டாக்டர் லட்சுமி விஜயகுமார், கூடுதல் டிஜிபி வினித் தேவ் வான்கடே ஆகியோர் இடம் பெற்றனர்.
ஆன்லைன் விளையாட்டுகள் திறன்கள், இதன்மூலம் ஏற்படும் தீமைகள், நிதியிழப்பு என்னென்ன என்பது குறித்து ஆய்வு செய்தது. ஆன்லைன் விளையாட்டுகளில் பண பணப்பரிவர்த்தனை எந்தளவு கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டது.
மேலும் ஆன்லைன் விளையாட்டுக்குத் தடைச் சட்ட மசோதாவை உருவாக்குவதற்கான காரணங்கள் என்னென்ன என்பது குறித்தும் இந்தக் குழு ஆய்வு நடத்தியது. நீதிபதி சந்துரு தலைமையிலான குழுவினர் தங்கள் ஆய்வை சில மாதங்களுக்கு நிறைவு செய்தனர்.
தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அக்குழு அரசிடம் அறிக்கை கொடுத்துள்ளது. இதனிடையே ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது தொடர்பாக கருத்து தெரிவிக்க பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்திருந்தது.
அதன்படி, கருத்துக்கேட்புக் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. பொதுமக்களும், அரசியல் கட்சி பிரதிநிதிகளும், ஆன்லைன் ரம்மி விளையாட்டு நிறுவனங்களும் தங்கள் தரப்பு கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு குறித்து அவசர சட்டம் கொண்டு வருவது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், ஆலோசனை மேற்கொண்டார்.
கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் திவால், உள்ளிட்ட அலுவலர்களுடன் ஆன்லைன் ரம்மி விளையாட்டு குறித்த அவசர சட்டம் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தனர்.
தமிழ்நாட்டில் போதை பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிப்பது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்கள் போலீஸ் சூப்பிரண்டுகள் கூட்டம் ஏற்கனவே நடைபெற்ற நிலையில், மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆன்லைன் ரம்மி தடை குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் ...ஒபிஎஸ்