சென்னை: டெல்டா மாவட்ட விவசாயிகள் நலனுக்கு ரூ.61.09 கோடி மதிப்பில் குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். விவசாயிகள், குறுவைப் பருவத்தில் அதிக மகசூல் எடுக்க வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் 2 ஆயிரத்து 870 மெட்ரிக் டன் சான்று நெல் விதைகள், 1 லட்சத்து 90 ஆயிரம் ஏக்கர் பரப்பில் முழு மானியத்தில் இரசாயன உரங்கள், 24 ஆயிரம் ஏக்கர் பரப்பில் பசுந்தாளுர விதைகள் போன்ற இடுபொருள்கள் விவசாயிகளுக்கு மானிய விலையில் விநியோகிக்கப்படும்.
குறிப்பாக வேளாண் இயந்திரங்களை மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்க ரூ.50 கோடி நிதி, நீரை திறம்பட சேமித்து பயிர்சாகுபடிக்கு பயன்படுத்தும் வகையில், பண்ணைக்குட்டைகள் அமைக்க ரூ.11.09 கோடி நிதி என மொத்தம் ரூ.61.09 கோடி மதிப்பீட்டில் குறுவை சிறப்புத் தொகுப்புத்திட்டத்தை முதலமைச்சர் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் 2 லட்சத்து 7 ஆயிரத்து 259 விவசாயிகள் பயனடைவார்கள்.
எனவே, நடப்பாண்டில் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டதாலும், ரூ.61.09 கோடி மதிப்பில் அறிவிக்கப்பட்ட குறுவை சிறப்புத் தொகுப்புத்திட்டத்தின் காரணமாகவும், குறுவை நெல் சாகுபடி இலக்கான 3 இலட்சத்து 50 ஆயிரம் ஏக்கரை விட கூடுதலான பரப்பளவில் இந்த ஆண்டு சாகுபடி மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்