சென்னை: இராயப்பேட்டை, புதுக்கல்லூரியில் இன்று(15.10.2022) தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான பணிஆணைகளை வழங்கினார்.
கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், கொஞ்சம் வேதனையோடு நான் குறிப்பிட விரும்புகிறேன். என்னவென்றால், இரண்டு நாளைக்கு முன்னால், சென்னையில் சத்யா என்ற ஒரு மாணவிக்கு நடந்த துயரத்தை அறிந்து நான் நொறுங்கி போயிருக்கிறேன். நான் மட்டுமல்ல, அதைப் படித்த, அறிந்த அத்தனை பேர்களுமே, நீங்கள் எல்லாம் துக்கத்தில் இருந்திருப்பீர்கள், துயரத்தை அடைந்திருப்பீர்கள். இது போன்ற சம்பவங்கள், இனி தமிழ்நாட்டில் நிகழக்கூடாது, இதுவல்ல நாம் காண விரும்பக்கூடிய சமூகம்.
இனி எந்தப் பெண்ணுக்கும் இதுபோல, நடக்காமல் தடுக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. தங்கள் பிள்ளைகள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அறிவாற்றலிலும், தனித்திறமையிலும், சமூக நோக்க மனப்பான்மையும் கொண்டவர்களாக அவர்களை பெற்றோர்கள் வளர்க்க வேண்டும். பாடப் புத்தகக் கல்வி மட்டுமல்ல, சமூகக்கல்வி அவசியமானது.
தன்னைப்போலவே, பிற உயிரையும், மதிக்க, பாதுகாக்க கற்றுத்தர வேண்டும். நல்லொழுக்கமும், பண்பும் கொண்டவர்களாக, அவர்கள் வளர்ந்து, வாழ்ந்து இந்த சமூகத்துக்கான தங்கள் பங்களிப்பை வழங்கவேண்டும். அவர்கள் எந்தவகையிலும் திசை மாறி சென்று விடாதபடி வளர்க்க வேண்டிய பெரும் பொறுப்பு பெற்றோருக்குத்தான் இருக்கிறது.
ஆண்கள் வலிமையுடையவர்கள்: இயற்கையில், ஆண் வலிமையுடையவனாக இருக்கலாம். அந்த வலிமை அடுத்தவர்களை கட்டுப்படுத்துவதாக இருக்கக்கூடாது. பெண்களை பாதுக்காக்கக்கூடியதாக அந்த வலிமை இருக்க வேண்டும். சில இளைஞர்கள் என்னமாதிரியாக வளர்கிறார்கள் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது. பள்ளி, கல்லூரிகளும், பெற்றோர்களும் சேர்ந்து இளைய சக்திகளை பாதுகாக்க அவர்களை எல்லாம் வளர்க்க வேண்டும் என்று நான் இந்த நேரத்தில் கேட்டுக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
வேலை கிடைத்துவிட்டது என்று தேங்கிவிடாதீர்கள்: கடந்த ஓராண்டு காலத்தில் உருவாக்கப்பட்ட பல்வேறு தொழில் ஒப்பந்தங்களின் காரணமாக சுமார் 2 இலட்சம் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்க இருக்கிறது. அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த பலன்களை நமது இளைஞர்கள் நிச்சயமாக அடைவார்கள். ஒவ்வொரு தனிமனிதருக்கும், நன்மை அளிக்கும் அரசாக இந்த திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. அதில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையும் முக்கியமான பங்களிப்பை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இளைஞர்களிடம் பல்வேறு திறமைகளை உருவாக்குங்கள். திறமை பெற்ற இளைஞர்கள் அனைவருக்கும் தகுதியான வேலைகளை உருவாக்கித் தாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். வேலை வாய்ப்பைப் பெற்ற இளைஞர்கள், தங்களது தனித்திறமைகளை வளர்த்துக் கொண்டு தங்களுக்கு ஆர்வமான துறைகளில் உயர்வை அடைந்தாக வேண்டும்.
வேலை கிடைத்துவிட்டது என்று தேங்கிவிடாதீர்கள். எப்போதுமே தேங்கிய நீரானது, குட்டையாகி விடும். ஓடிக்கொண்டிருக்கக்கூடிய ஆறு தான் கடலை சென்றடையும். அத்தகைய கடலளவு சாதனைகளை நிகழ்த்தக்கூடியவர்களாக நமது இளைஞர்கள் இருக்க வேண்டும் என்று பேசினார்.
இதையும் படிங்க: மாணவி சத்தியா கொலை வழக்கு - கைதி சதீஷுக்கு சிறையில் பலத்த பாதுகாப்பு