சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இன்று (04.09.2022) நடைபெற்ற ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டட அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். பின்னர் அவர் பேசுகையில், “1862ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் இந்த உயர் நீதிமன்றம் நிறுவப்பட்டது. அந்த வகையில் பார்த்தால், இது 160-ஆவது ஆண்டு. 160 ஆண்டுகள் பழமை என்பது இந்தியாவில் சென்னை, கல்கத்தா, மும்பாய் ஆகிய மூன்று நகரங்களுக்கு மட்டுமே வாய்த்த பெருமை என தெரிவித்த அவர் நீதி கம்பீரமாக நிலைநாட்டப்படுவதைப் போலவே, இந்த கட்டடமும் கம்பீரமாக நின்று கொண்டு இருக்கிறது.
இந்தோ - சார்சனிக் முறைப்படி கட்டப்பட்ட இந்தக் கட்டடம், முதல் உலகப் போரின் போது எம்டன் போர்க்கப்பலால் தாக்குதலுக்கு உள்ளானது. இன்றைக்கும் கூட அதன் நினைவாக பாரிமுனையில் கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது. 1891-ஆம் ஆண்டு சென்னையில் சட்டக்கல்லூரி தொடங்கப்பட்டது. மெட்ராஸ் சட்டக்கல்லூரி என்று அதற்கு அப்போது பெயர். இந்தியாவுக்கான சட்டத்தை உருவாக்கிக் கொடுத்த சட்ட மாமேதை அம்பேத்கர் நினைவாக டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி என்று அதற்குப் பெயர் சூட்டியவர் மறைந்த முதல்வர் மு. கருணாநிதி.
பாரம்பரியமான கட்டடங்களைப் பாதுகாப்பது என்பது நமது வரலாற்றைப் பாதுகாப்பது. அதில் நமது அரசு மிக கவனமாக உள்ளது. பாரம்பரியமான கட்டடங்கள் அதிகம் உள்ள நகரமாக சென்னை அமைந்துள்ளது. நீதியும், நேர்மையும் தமிழர்களின் வாழ்வியலில் இரண்டறக் கலந்துவிட்டவை! அதற்கான சான்றுகள் தமிழிலக்கியங்களில் கொட்டிக்கிடக்கின்றன. வள்ளுவரும், இளங்கோவடிகளும், புறநானூற்றுப் புலவர்கள் பலரும், நீதியின் மேன்மையைப் பற்றியும், செங்கோல் வழுவாமையின் சிறப்பினைப் பற்றியும், எப்போதும் உயர்த்திப் பிடித்துள்ளார்கள்.
அத்தகைய ஒரு திராவிட மரபுவழி வந்த நம் பண்பாட்டில் வளர்ந்த இந்த அரசு, அதே உயர்ந்த இடத்தில் நீதித்துறையை வைத்து, மதித்து அதற்கான தேவைகளை நிறைவேற்றி வருகிறது. சென்னையில் ஏராளமான நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. அவை அனைத்தையும் ஒரே இடத்திலிருந்து செயல்பட வைக்க வேண்டும். அதுதான் சிறப்பானதாக இருக்கும். நீதித்துறையினர் நினைத்து அரசுக்குப் பரிந்துரை செய்ததும், உடனே அதனை நாங்கள் முழுமையாக ஏற்றுக் கொண்டு ஒப்புதலை வழங்கினோம்
இதன் மூலமாக சென்னையில் இருக்கக்கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் ஒரே இடத்திலிருந்து செயல்படப் போகின்றன. இது பொதுமக்களுக்கு ஏற்பட்ட வசதி மட்டுமல்ல, வழக்கறிஞர்களுக்கும் இது மிகப்பெரிய வசதிதான். அலைச்சல் தவிர்த்து, அமைதியாகப் பணியாற்ற இது வழிவகுக்கும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்த அரசு பொறுப்பேற்ற மே மாதம் 2021 முதல், 3 கூடுதல் மாவட்ட நீதிமன்றங்கள், 12 சார்பு நீதிமன்றங்கள், 6 முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் மற்றும் 14 மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் உள்ளிட்ட 35 புதிய நீதிமன்றங்கள், 54 கோடியே 85 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்க ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. கோயம்புத்தூர், காஞ்சிபுரம், திருவாரூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பட்டியல் இனத்தவருக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்க 4 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
புதியதாக நீதிமன்ற கட்டடங்கள் கட்டுதல், குடியிருப்பு கட்டடங்கள் கட்டுதல், பழைய நீதிமன்ற கட்டடங்களை பராமரித்தல் ஆகிய பணிகளுக்காக, தமிழ்நாடு அரசு 2021-22 மற்றும் 2022-23 ஆகிய நிதியாண்டுகளில் மொத்தம் 268.97 கோடி ரூபாய் ஒப்படைப்பு தந்திருக்கிறது என தெரிவித்த அவர் கீழமை நீதிமன்றங்களுக்கு (Subordinate Courts) பல்வேறு நிலையிலான 155 பணியாளர் பணியிடங்களை உருவாக்கி ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன என குறிப்பிட்டார்.
சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளை நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களுக்கு கணினி மற்றும் கணினி தொடர்பான கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு (Computer and IT related infrastructure) மொத்தம் ரூபாய் 11.63 கோடி ஒப்படைத்துள்ளது. முதலாவதாக தென்னிந்திய மக்கள் பயன்பெறும் வகையில் உச்சநீதிமன்றத்திற்கான ஒரு கிளை நீதிமன்றம் சென்னையில் அமைக்கவேண்டும்.
இரண்டாவதாக, நீதி கேட்டு வந்திருக்கும் மக்கள் நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணையின் தன்மையினை புரிந்துகொள்ளும் வகையில் உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக அமையவேண்டும் என தெரிவித்தார். மக்களின் நல்வாழ்வுக்கு அரசும், மக்களுக்காக, நீதிக்காக நீங்களும் பணியாற்றி வருகிறீர்கள். நல்வாழ்வுடன் இணைந்ததுதான் நீதி. எனவே நீதித்துறையின் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான அனைத்து உதவிகளையும், தமிழ்நாடு அரசு எப்போதும் செய்யும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: "உள்துறை அமைச்சகம் போதைப்பொருள் பிரச்சனையை ஒடுக்க முயற்சித்துவருகிறது"