சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், புதிதாக ஒமைக்ரான் தொற்று இந்தியாவில் பரவ தொடங்கியுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் ஒமைக்ரான் தொற்று தடுப்பு நடவடிக்கையில், சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் உள்ளிட்ட விமான நிலையங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வருகின்ற 15ஆம் தேதியுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நிறைவடைய உள்ள நிலையில், வருகின்ற திங்கட்கிழமை (டிசம்பர் 13) முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து சுகாதாரத்துறை செயலாளர், சுகாதாரத்துறை அமைச்சர், அரசு உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
புதிய கட்டுப்பாடுகளுக்கு வாய்ப்பு
இந்த ஆலோசனை கூட்டத்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் எனவும், குறிப்பாக, பொழுதுபோக்கு பூங்கா. கடற்கரை, திரையரங்கம் உள்ளிட்டவற்றில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளது எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
கரோனா மூன்றாவது அலை குறித்த அச்சம் தொடர்ந்து இருக்கும் நிலையில், புதிய வகை தொற்று பிற நாடுகளில் பரவிவரும் நிலையில் அடுத்தகட்ட ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிறிஸ்துமஸ். ஆங்கிலப் புத்தாண்டு ஆகிய பண்டிகை காலங்கள் வர உள்ளதால் பொது இடங்களில் பொதுமக்கள் கூட தடை விதிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.