தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் வரும் சனிக்கிழமை காலை 11:30 மணியளவில், இக்கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் கரோனா தொற்று தடுப்புப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இதன்தொடர்ச்சியாக, கடந்த சில நாட்களுக்கு முன், அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொற்றுத் தடுப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், மேலும் தேவைப்பட வேண்டிய ஆலோசனைகளையும் பெற்றார்.
இதையடுத்து, திமுக சார்பாக சட்டப்பேரவை உறுப்பினர் எழிலன், அதிமுக சார்பாக சட்டப்பேரவை உறுப்பினரும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான சி. விஜயபாஸ்கர், என சட்டப்பேரவையில் இடம் பெற்றுள்ள 13 கட்சிக்களின் எம்.எல்.ஏ-க்களை கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டார், மு.க.ஸ்டாலின்.
இதன்படி, மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து வரும் சனிக்கிழமை(மே 22) சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் காலை 11:30 மணியளவில் நடைபெற இருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, கூட்டத்திற்கு மறுநாள் (மே 23) தொற்று தடுப்பு குறித்து சிறப்பு மருத்துவ நிபுணர்கள் குழுவுடனும், மாவட்ட ஆட்சியர்களுடனும் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தற்போது அமலில் உள்ள ஊரடங்கு 24ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதால், ஊரடங்கு நீட்டிப்பது குறித்தும், கட்டுப்பாடுகளை அதிகரிப்பது குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: கறுப்பு பூஞ்சையால் நோயாளி மரணம்? - சுகாதாரத் துறை மறுப்பு!