சென்னை: சென்னை, கொளத்தூரில், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கௌதமபுரம் திட்டப்பகுதியில் ரூ.111.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 840 அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும், 1 கோடியே 95 இலட்சத்து 39 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையக் கட்டடங்கள், நூலகக் கட்டடம் மற்றும் பூங்கா அமைப்பதற்கான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் 1 கோடியே 94 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான பணிகளையும் அவர் தொடங்கி வைத்தார்.
அனைவருக்கும் வீடு வசதி திட்டத்தின் கீழ், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கௌதமபுரம் திட்டப்பகுதியில் பழுதடைந்த பழைய குடியிருப்புகள் இடிக்கப்பட்டு, 14 அடுக்குகளுடன் 840 புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டன. ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் ரூ.111.80 கோடி திட்ட மதிப்பீட்டில் பொருளாதாரத்தில் நலிவுற்ற குடும்பங்களுக்காக கட்டப்பட்டுள்ளன.
ஒவ்வொரு குடியிருப்பும் 406 சதுர அடி கட்டுமானப் பரப்பில் ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையலறை மற்றும் கழிவறை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
இத்திட்டப்பகுதியில் பழைய குடியிருப்புகளில் வாழ்ந்த 400 குடும்பங்கள் மற்றும் கூடுதலாக கட்டப்பட்டுள்ள 440 குடியிருப்புகளில் சென்னை மாநகரில் வாழும் பொருளாதாரத்தில் நலிவுற்ற குடும்பங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஒரு குடியிருப்பிற்கான மதிப்பீடு ரூ.13.31 இலட்சம் ஆகும். இதில், ஒன்றிய அரசின் பங்கு ரூ.1.50 இலட்சம், மாநில அரசின் பங்களிப்பு ரூ.6 இலட்சம் மற்றும் பயனாளிகளின் பங்களிப்பு ரூ.5.81 இலட்சமாக இருந்தது.
பயனாளிகளின் பங்களிப்பு தொகை அதிகமாக இருந்ததால், பயனாளிகளின் பொருளாதார நிலையினை கருத்தில் கொண்டு முதலமைச்சர் உத்தரவின்படி மறுகட்டுமான திட்டத்தின் கீழ் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ஒதுக்கீடுதாரர்களுக்கு பயனாளிகளின் பங்களிப்பு தொகையை தவணை முறையில் மாதந்தோறும் ரூ.250/- வீதம் 20 ஆண்டுகள் வரை செலுத்தலாம் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கௌதமபுரம் திட்டப்பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 840 அடுக்குமாடி குடியிருப்புகளை நேற்று (செப்.11) முதலமைச்சர் திறந்து வைத்து, 400 குடும்பங்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகள் மற்றும் வீடுகளுக்கான சாவிகளை வழங்கினார்.
இத்திட்டப்பகுதியில் அடிப்படை வசதிகளான மழை நீர் கால்வாய், கான்கீரிட் சாலைகள், தெரு மின்விளக்குள், கீழ்நிலை நீர் தேக்க தொட்டி, மின்தூக்கி, தரைத்தள வாகன நிறுத்துமிடம், தடையில்லா மின்சாரத்திற்கான மின் மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், குடியிருப்போர் நலச் சங்கம் அமைக்கப்பட்டு குடியிருப்புகளை நல்ல முறையில் பராமரிக்க நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கொளத்தூர், கௌதமபுரம், ரமணா நகரில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 74 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள இரண்டு அங்கன்வாடி மையக் கட்டடங்கள் மற்றும் 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள நூலகக் கட்டட பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து, ஜவஹர் சாலையில் ரமணா நகர் திறந்தவெளி நிலத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 80 இலட்சத்து 69 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான புதிய பூங்கா, என மொத்தம் 1 கோடியே 95 இலட்சத்து 39 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
இதையும் படிங்க: யாருக்காக ஷிண்டே வருகிறார்? யாரை மிரட்டுகிறார்கள்? - பாஜக அண்ணாமலைக்கு எதிராக சீறிப்பாய்ந்த கேசிஆர்!