சென்னை: கடந்த ஜூலை 12ஆம் தேதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை முதலமைச்சர் ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தினார். இதனையடுத்து, கடந்த ஜூலை 14 அன்று பரிசோதனைக்காக முதலமைச்சர் ஸ்டாலின் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்றே அவருக்கு சிடி ஸ்கேனும் எடுக்கப்பட்டது.
ஸ்கேன் முடிவில் அவருக்கு 10 சதவீத நுரையீரல் தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், முதலமைச்சரின் உடல்நிலையை கண்காணிக்க தலைமை மருத்துவர்கள் வந்திருந்தனர். தொடர்ந்து, தனிமையில் இருந்து வந்த மு.க.ஸ்டாலின் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தகவல் வெளியானது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (ஜூலை 18) டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், "கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலினின் தனிமைப்படுத்துதல் காலம் நாளையுடன் நிறைவடைகிறது. அதனால், அவர் நாளை வீடு திரும்புவார். பின்னர், வீட்டில் மேலும் ஒரு வாரம் ஒய்வு எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 'அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்': ஓபிஎஸ் உடல்நிலையை விசாரித்து முதலமைச்சர் போட்ட நங்கூர ட்வீட்!