கோவிட்-19 இரண்டாம் அலை தமிழ்நாட்டில் உச்சமடைந்துள்ளது. இதையடுத்து மாநிலத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த பெருந்தொற்று பேரிடர் காலத்தில் மக்களுக்காக களப்பணியற்ற திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அவர், "திமுக ஆட்சி அமைவதற்கு அயராது பணியாற்றிய உடன்பிறப்புகளாம் உங்களை நேரில் காணும் மகிழ்ச்சியான வாய்ப்பு இன்னும் அமையவில்லையே என்ற ஏக்கம் எனக்கு இருக்கிறது. உங்கள் உழைப்பாலும் மக்களின் ஆதரவுடனும் முதலமைச்சர் என்ற பொறுப்பைச் சுமந்திருக்கும் என் முன்னே சவாலான பெரும்பணி இருக்கிறது என்பதை நீங்களும் அறிவீர்கள்.
திருச்சியில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட பிறகு ஊடகத்தினருடனான சந்திப்பின்போது, “பொறுப்பேற்ற நாளைவிட, கரோனாவைக் கட்டுப்படுத்திவிடடோம் என்ற செய்தி வரும் நாள்தான் எனக்கு மகிழ்ச்சியான நாள்” என்று தெரிவித்தேன். நம் அயராத உழைப்புக்கான உண்மையான வெற்றி நாளும் அதுதான்.
கரோனா இரண்டாவது அலையின் கொடுந்தாக்குதலில் இருந்து தமிழ்நாட்டை காக்கின்ற பணியை அனைத்துத் தரப்பினரையும் இணைத்து மக்கள் இயக்கமாக மேற்கொண்டிருக்கிறது நமது அரசு. நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்திடவும், உயிரிழப்புகள் இல்லாத நிலையை உருவாக்கிடவும் தேவையான அனைத்து முயற்சிகளையும் முழுமையான அர்ப்பணிப்பு உணர்வுடன் மேற்கொண்டு வருகிறது.
இந்த முயற்சிகள் வெற்றிபெறுவதற்குப் பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியத் தேவை என்பதால் மே 24 (திங்கள்) முதல், ஒருவார காலத்திற்கு முழு ஊரடங்கை அமல்படுத்துவது என மருத்துவ நிபுணர்களுடனும் அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுடனும் ஆலோசித்து முடிவெடுத்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கரோனாவின் இரண்டாவது அலையை முழுமையாகக் கட்டுப்படுத்தும் வகையில் நோய்ப் பரவல் சங்கிலியை உடைத்திடவும், மூன்றாவது அலை குறித்த மருத்துவத்துறை வல்லுநர்களின் எச்சரிக்கையை மனதில் கொண்டு முன்னேற்பாடுகளை முழுவீச்சில் மேற்கொள்ளவும் இந்த முழுமையான ஊரடங்கு காலத்தில் அனைவரின் ஒத்துழைப்பையும் நாடுகிறேன். உடன்பிறப்புகளாம் உங்களின் உறுதுணையை எதிர்பார்க்கிறேன்.
இரண்டாவது அலை பரவத் தொடங்கிய நிலையில், தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பாகவே நம்முடைய உடன்பிறப்புகள், உங்களில் ஒருவனான என் அன்பு வேண்டுகோளை ஏற்று ‘ஒன்றிணைவோம் வா’ செயல்பாட்டின் அடிப்படையில் மக்களுக்கு உதவிடும் பணியை மேற்கொண்டீர்கள். ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகும்கூட, அரசு மட்டும் பார்த்துக் கொள்ளட்டும் என்றில்லாமல் கழகத்தின் நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் அவரவர் தொகுதிகளிலும், தி.மு.கழக மாவட்ட நிர்வாகிகள் தொடங்கி கழகத்தின் அனைத்து செயல்வீரர்களும் களப்பணியாற்றி வருவதை அறிவேன்.
முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், ‘ஒன்றிணைவோம் வா’ செயல்திட்டத்தை மேற்கொண்டு வரும் தி.மு.கழகத்தினர் மக்களின் அடிப்படைத் தேவையான உணவினை வழங்கிடும் பணியில் ஈடுபட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். ஏழை - எளிய மக்கள், வீட்டில் சமைக்க முடியாத சூழலில் இருப்பவர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட யார் யாருக்கெல்லாம் உணவு தேவைப்படுகிறது என்பதை அறிந்து, உணவைச் சமைத்து அவர்களுக்கு வழங்கி, பசி போக்கிடும் பெரும்பணியை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
உணவு சமைப்பதற்கு ஏற்ற இடங்களைத் தேர்வு செய்து, தரமான - நிறைவான வகையில் உணவைச் சமைத்து அவற்றைப் பொட்டலங்களாக மக்களுக்கு வழங்கிடுவதற்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்று - கரோனா கால நெறிமுறைகளுடன் செயல்பட வேண்டும் என தி.மு.கழகத்தின் அனைத்து நிர்வாகிகளையும் களப்பணியாற்றும் உடன்பிறப்புகளையும் கேட்டுக் கொள்கிறேன்.
எவ்வித விதிமீறல்களுக்கும் இடம்தராமல், இராணுவத்திற்கு நிகரான கட்டுப்பாட்டுடனும் உறுதியுடனும் உதவிப்பணிகளை மேற்கொண்டிட வேண்டும். உணவுப் பொட்டலங்களை வழங்கிடும்போது, எக்காரணம் கொண்டும் கூட்டம் கூடக்கூடாது. தேவைப்படுபவர்களின் வசிப்பிடம் அருகே சென்று வழங்குவதே சரியானதாக இருக்கும். முகக் கவசம், தனிமனித இடைவெளி இவற்றைக் கண்டிப்பாகக் கடைப்பிடித்திட வேண்டும்.
அதுபோலவே, ஊரடங்கில் பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் காய்கறி - மளிகைப் பொருட்கள் வழங்குவதாக இருந்தாலும், உரிய அனுமதி பெற்று நெறிமுறைகளைக் கடைப்பிடித்து, தேவைப்படுவோரின் வீடுகளுக்கே சென்று வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். கூட்டம் தவிர்ப்பதே கரோனா தொற்றுச் சங்கிலியைத் தகர்ப்பதற்கான முதல் நடவடிக்கை என்பதை உள்ளத்தில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். பிணி நீக்கும் போர்க்களம் இது. இதில், பசிப் போக்கும் பெரும்பணியை மேற்கொள்வீர்.
தவிர்க்க முடியாத இந்த முழு ஊரடங்கினால் தமிழக மக்களின் உணவுத் தேவைக்கு எவ்விதத் தடையும் ஏற்படாத வகையில் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளான நீங்கள் பசியாற்றுங்கள். அன்புடன் உங்கள் ஸ்டாலின்" எனக் கடிதத்தில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தடுப்பூசி போடுவதில் யாருக்கெல்லாம் முன்னுரிமை?- சுகாதாரத்துறை செயலர் விளக்கம்!