டெல்லி லோக் கல்யாண் மார்க் பகுதியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து பேசுகிறார். தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் முதல் முறையாக டெல்லி பயணம் மேற்கொண்டு பிரதமரை சந்திக்கிறார்.
அதற்காக இன்று காலை சென்னை ஆழ்வார் பேட்டை இல்லத்தில் இருந்து காரில் விமான நிலையம் சென்றார். தொடர்ந்து தனி விமானம் மூலம் முதலமைச்சர் டெல்லி செல்கிறார்.
35 முக்கிய விஷயங்கள்:
இந்த சந்திப்பின் போது செங்கல்பட்டு தடுப்பூசி மையத்திற்கு அனுமதி அளிப்பது, கரோனா சிறப்பு நிவாரண நிதிப் பங்கீடு, தடுப்பூசியை அதிகளவில் ஒதுக்குவது, நீட் தேர்வு உள்ளிட்ட 35 முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமருடன் மு.க.ஸ்டாலின் பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மோடி, மு.க.ஸ்டாலின் இடையே நிர்வாக ரீதியாக நடைபெறும் இந்த சந்திப்பு சுமார் 1 மணிநேரம் நீடிக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது பிரதமர் அலுவலகம் கூடுதல் செயலாளர் அமுதா ஐஏஎஸ், தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோரும் உடன் இருப்பார்கள்.
மத்திய அமைச்சர்களுடன் சந்திப்பு:
டெல்லி சென்றுள்ள ஸ்டாலின் தொடர்ந்து குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் உள்ளிட்டோரையும் சந்தித்துப் பேச உள்ளார்.
தொடர்ந்து டெல்லியில் கட்டப்பட்டுவரும் திமுக கட்சி அலுவலகத்தை முதலமைச்சர் பார்வையிடுகிறார். நாளை காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை மரியாதை நிமிர்த்தமாகச் சந்தித்து வாழ்த்துப்பெறுகிறார்.
முதலமைச்சரின் சந்திப்பு தொடர்பான முன்னெற்பாடுகளை தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், திமுக எம்பி டி.ஆர்.பாலு, அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் கவனத்துவருகின்றனர்.
இதையும் படிங்க: ’உயிர்களைப் பணயம் வைத்து பிரதமர் மோடியின் பிம்பத்தைக் காக்கும் ஒன்றிய அரசு’ - ராகுல் காந்தி