சென்னை: வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகத் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நேற்று (நவ.6) இரவு தொடங்கிய மழை விடிய விடியக் கொட்டித் தீர்த்தது.
இதனால் சாலைகள், குடியிருப்புகள் வெள்ள நீர் சூழ்ந்து காணப்பட்டது. விடாமல் பெய்து வரும் கனமழை மேலும் மூன்று மணி நேரத்திற்குத் தொடரும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அலுவலர்களுடன் முதலமைச்சர் ஆய்வு
இந்நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். மேலும், மழை வெள்ளத்தை வெளியேற்ற துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளும்படி சென்னை மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அப்போது அமைச்சர்கள் சேகர்பாபு, கே.என்.நேரு, தலைமைச் செயலர் இறையன்பு, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு ஆகியோரும் முதலமைச்சருடன் ஆய்வில் ஈடுபட்டனர்.
மேலும், கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முதலமைச்சர் வேண்டுகோள்
அரசு அலுவலர்களுடன் இணைந்து மக்களுக்குத் தேவையான நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும் என திமுக எம்பி, எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நீடிப்பதால் சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு சென்னையில், குறிப்பாக வடக்கு மற்றும் மத்திய சென்னைப் பகுதிகளில் அதிக மழைப் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சென்னைக்கு ரெட் அலர்ட்: மீண்டும் திரும்புகிறதா 2015 ?