வடகிழக்குப் பருவமழை கடந்தாண்டு பொய்த்துவிட்ட நிலையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்தாண்டு வடகிழக்குப் பருவமழை நல்ல மழை தரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி, கடந்த இரண்டு வாரங்களாகவே தமிழ்நாட்டில் பரவலாக நன்கு மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நீலகிரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இதனால் ஆங்காங்கே பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டிருந்தது.
இந்நிலையில் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதற்காகத் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது.
இந்தக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன், ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி. உதயகுமார், தலைமைச் செயலர் சண்முகம், பேரிடர் மேலாண்மைத் துறைச் செயலர் அதுல்யா மிஷ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்பட உயர் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ளவும் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
இதையும் படிக்க...பருவமழை காலத்தில் விடுமுறையை தவிர்க்கனும் - செல்லூர் ராஜு!