தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாகக் கரோனா தொற்றின் வீரியம் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசின் சார்பில் கடந்த 10ஆம் தேதிமுதல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தலைநகர் சென்னையில் தொற்றின் பாதிப்பு இரண்டாயிரத்தைக் கடந்துள்ளது. மாநகராட்சிப் பகுதிகளில் அபராதம் விதிக்க முடிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
மாநிலம் முழுவதும் கரோனா பாதிப்பின் எண்ணிக்கை ஆறாயிரத்தைக் கடந்துள்ளது. தொடர்ந்து நாளுக்கு நாள் தொற்றின் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தவண்ணமே உள்ளது.
இந்த நிலையில், இன்று நண்பகல் 12 மணிக்கு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உயர் அலுவலர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
இதில், ஊரடங்கு விதிமுறைகளைக் கடுமையாக்குவது, பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்துவது, தடுப்பூசி கொள்முதலை அதிகமாக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.
கரோனா பரவல் அதிகமானால், ஞாயிற்றுக்கிழமைகளில் பகல் நேர ஊரடங்கு அறிவிப்பது குறித்தும், ஆலோசனையில் முடிவு எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.
இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகர ஆணையர் கோ. பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொள்வர் எனத் தெரிகிறது.