சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இன்று (ஏப்.23) ஒன்பது மாடி நிர்வாக பிரிவு கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, நாமக்கல், விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டடங்களை திறந்து வைத்தார்.
இதையடுத்து ரமணா "எல்லாருக்கும் வணக்கம், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதில் ரொம்ப மகிழ்ச்சி என்று தமிழில் உரையை தொடங்கினார்.
"ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை"
இந்த குறளை மேற்கோள்காட்டி, முதல் முறையாக, சென்னை வந்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். இதைத்தொடந்து பேசிய அவர், "ஆக்கப்பூர்வமான தீர்வுகள் காணும்போது, நீதிபதிகள் கண்மூடி சட்டத்தை மட்டும் சார்ந்திருக்க முடியாது.
சமூக உண்மையை உணர வேண்டும். காபி, நூடுல்ஸ்போல மக்கள் உடனடி நீதியையும் எதிர்பார்க்கின்றனர். அது நீதியைக் கொன்று விடுகிறது. மொழி, அடையாளம் ஆகியவற்றால் பெருமை மிக்க தமிழர்கள். மொழிக்காக எப்போதும் முதலாவதாக வருவார்கள்.
நீதிமன்றப் பணிகள் நிரப்பப்படும்: நீதிமன்ற விசாரணைகளில் மாநில மொழிகளைப் பயன்படுத்துவதில் சில சிக்கல் உள்ள போதும், தற்போதைய தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி, உயர் நீதிமன்றங்களில் மாநில மொழிகளில் வழக்காடுவது குறித்து விரைவில் தீர்வு காணப்படும்.
நீதித்துறை காலியிடங்களை நிரப்புவதைப் பொறுத்துவரை 1,104 உயர் நீதிமன்ற நீதிபதி பணியிடங்களில் 388 காலியிடங்கள் உள்ளது. அவற்றை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளைக் கேட்டுக் கொண்டுள்ளேன்.
முதலமைச்சருக்கு வாழ்த்துகள்: நீதிமன்றங்களில் வழக்குகள் எண்ணிக்கைக்கு ஏற்ப உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க வேண்டும். வழக்கறிஞர்கள் நலனுக்காகப் பாடுபடும் முதலமைச்சரை பாராட்டுகிறேன். நீதித்துறையை மேம்படுத்த முதலமைச்சர் முழு ஒத்துழைப்பு வழங்குவதாக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி என்னிடம் கூறினார்" என்றார்.
இதையடுத்து "ஆணும் பெண்ணும் ஓரெனக் கொள்வதால் அறிவில் ஓங்கி தழைக்கும்" என்ற பாரதியார் பாடலை மேற்கோள்காட்டி நீதிபதி பதவிக்கு வர பாலினம், இடம், இனம், மொழி உள்ளிட்ட எவையும் தடையாக இருக்க கூடாது எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, "உச்ச நீதிமன்றத்தின் கிளையை தமிழ்நாட்டில் தொடங்குவது குறித்து திமுக எம்.பி. வில்சன், மாநிலங்களவையில் தனிநபர் மசோதாவை தாக்கல் செய்துள்ளார். அதன் மீது மத்திய அரசு என்ன முடிவு எடுக்கப்போகிறது என்று தெரியவில்லை. ஆனால், உச்ச நீதிமன்றத்தை வழக்கறிஞர்கள் எளிதில் அணுக ஏதுவாக காணொலி காட்சி மூலம் வழக்குகளைத் தொடர்ந்து விசாரிக்க சக நீதிபதிகளுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
இதையடுத்து பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் கூறுகையில், "சட்டக் கல்வி இயக்குநர் பதவி காலியாக உள்ளது. அதற்கு உரிய மாவட்ட நீதிபதியை நியமிக்க வேண்டும். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, தமிழ்நாட்டில்தான் படித்தார். அவரை மண்ணின் மைந்தராக ஏற்றுக் கொள்ளலாம். முதல் இந்திய நீதிபதி ராஜமன்னார் தெலுங்கர்தான்.
ஆனால், தமிழ் நிலம் தான் ஏராளமான தெலுங்கு நீதிபதிகளை உருவாக்கியது. தமிழ்நாட்டில் நீதித்துறை செயல்பாடு முன்னணியில் உள்ளது. 1.33 லட்சம் வழக்குகளில் 1.46 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது. கீழமை நீதிமன்றங்களில் 90 சதவீதம் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. இது நாட்டில் பெரிய சாதனை" என்றார்.
இதையும் படிங்க: உலக பாரம்பரிய நீர்பாசன கட்டமைப்பு விருதுகள் - தமிழ்நாடு 3 விருதுகளுக்கு தேர்வு!!