சென்னை சர்வதேச மையம் சார்பாக தற்போதைய சூழல் குறித்து காங்கிரஸ் மூத்தத் தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இந்து குழுமத் தலைவர் என். ராம் உடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பேசிய ப. சிதம்பரம், "நாட்டில் விலைவாசியை குறிக்கும் பணவீக்க குறியீடுகள் தொடர்ந்து உயர்ந்துவருகின்றன. நாட்டின் பொளாதாரமே தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாக முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவரது ஆய்வறிக்கையில், இது சாதாரண வளர்ச்சி; குறைவு இல்லை என்றும் இந்தியப் பொருளாதாரம் பெரும் மந்தநிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது எனவும் குறிப்பிட்டிருக்கிறார். உலகப் பொருளாதார வளர்ச்சி குறைந்தாலும் நமது நாட்டின் பொருளாதாரத்தை 6.5 சதவிகிதம் என்ற அளவில் நிலைநிறுத்த வேண்டும். அப்போதுதான் வேலையிழப்புகளைத் தவிர்க்க முடியும். 4.5 சதவிகித வளர்ச்சியில் வேலைவாய்ப்புகள் குறையும்.
திருக்குறளை மதிக்காததே இந்த அரசின் அடிப்படை பிரச்னை. 'நோய் நாடி நோய் முதல் நாடி' என்று பிரச்னையின் மூலத்தை கண்டறிந்து தீர்க்க வேண்டும் என வள்ளுவர் கூறுகிறார். அதுபோல் இந்தப் பொருளாதார பிரச்னையின் காரணம் என்ன என்பதைக் கண்டறிந்து அரசு செயல்பட வேண்டும். தற்போது நிலவும் பொருளாதார பிரச்னை அமைப்பு ரீதியிலானது, சுழற்சி முறையிலானது கிடையாது.
இரண்டு காலாண்டுகளில் வளர்ச்சி குறைவு ஏற்பட்டால் அதனை ரிஷஷன் (பொருளாதார மந்த நிலை) என்று கூறலாம். ஆனால் இது வளர்ந்த நாடுகளுக்குத்தான் பொருந்தும். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் வளர்ச்சி மிகவும் குறைந்தால் அது மந்தநிலையே. தற்போது ஐந்து காலாண்டுகளாக வளர்ச்சி குறைந்துள்ளது. 'பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருள்' என்பதைப் போல உள்ளது அரசின் செயல்.
ஊரகப் பகுதிகளில் வருவாய் குறைந்துள்ளது. ஊரக நுகர்வு 24 சதவிகிதம் குறைந்துள்ளது. இதன்மூலம், நாட்டில் ஊரகப் பகுதி வறுமை அதிகரிக்கிறது என்பதை உணர முடிகிறது. நாட்டின் சராசரி வறுமை 20 சதவிகிதமாக இருந்தாலும் நாட்டின் சில பகுதிகளில் வறுமையின் அளவு 40 சதவிகிதம் வரை உள்ளது. ஆனால் அரசு புள்ளிவிவரங்களை மறைக்கிறது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை, தவறான முறையில் அமலாக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி ஆகியவற்றால் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இப்போது வரை சரக்கு மற்றும் சேவை வரி தாக்கல் செய்யும் நடைமுறை பலருக்கும் தெரியவில்லை. வருமான வரித் துறை அலுவலர்கள் மோசமான அணுகுமுறையை கையாளுகின்றனர். இதனால் நாட்டில் தொழில் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த அரசு தொடர்ந்து தவறான முடிவுகளை எடுத்துவருகிறது. தற்போது மீண்டும் சரக்கு மற்றும் சேவை வரியை உயர்த்த முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பொருளாதாரம் தெரிந்தவர்களிடம் அரசு ஆலோசனை கேட்பதில்லை. இதன் விளைவுகள் மோசமாக இருக்கும்.
'பிரதமர் கையில் அனைத்து அதிகாரமும் குவிந்துள்ளதால் அமைச்சர்களால் எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை. இதனால்தான் பொருளதாரம் பாதிக்கப்படுகிறது' என ரகுராம் ராஜன் போன்ற நிபுணர்கள் கூறுகின்றனர்.
நாடு முழுவதும் பாஜக ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. இந்தி பேசும் மாநிலங்களை மட்டுமே பாஜக ஆட்சி செய்கிறது. ஏழு மாநிலங்களில் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்றால் இந்தியாவை ஆள முடியும். இந்தி பேசும் மாநிலங்களில் பாஜக இந்து ராஷ்டிர கொள்கையை முன்னெடுக்கிறது. நாட்டில் உள்ள முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காணாமல் முத்தலாக் சட்டம், 370 சட்டப்பிரிவு நீக்கம், தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை சட்டத்திருத்த மசோதா போன்ற முக்கியமல்லாத பிரச்னைகளை முன்னெடுக்கிறது.
நாட்டில் அச்ச உணர்வு, நிலையற்றத்தன்மை நிலவிவருகிறது. இதை சர்வதேச அரசுகள், அமைப்புகள் கவனித்துவருகின்றன. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன. குடியுரிமை சட்டத்திருத்த மசோதா அரசியல் சாசனத்திற்கு எதிரானது.
குடியுரிமைக்கு அடிப்படைத் தகுதியாக நிலப்பரப்பு மட்டும் அமைய வேண்டும். ஆனால் இந்தியாவில் முதல்முறையாக மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்க இந்தச் சட்டம் வழிவகுக்கிறது. பாஜக அரசுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைத்திருந்தால் அவர்கள் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு பதிலாக அரசியல் சாசனத்திலேயே திருத்தம் செய்திருப்பார்கள். இருப்பினும் இது குறித்து ஊடகங்கள் பேசுவதில்லை" என்று கூறினார்.
தேர்தல் நன்கொடை பங்குகள் (எலக்டோரல் பாண்ட்ஸ்) சட்டரீதீயிலான ஊழல் எனவும் ப. சிதம்பரம் கடுமையாக விமர்சித்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்துகொண்டார்.