சென்னை: சிட்லபாக்கம் ஏரியைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், கடந்த ஜனவரி 14ஆம் தேதி பொதுப்பணித் துறை சார்பில் ஆக்கிரமிப்புகள் அளவீடு செய்யப்பட்டன.
ஏரியிலிருந்து 71 அடி ஆக்கிரமிப்பு நிலத்தில் உள்ள 417 வீடுகள் உடனடியாக அகற்றப்பட வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு முதல்கட்டமாக 14 வீடுகளை இடிக்கும் பணி பொதுப்பணித் துறை, தாம்பரம் கோட்டாட்சியர், தாம்பரம் வட்டாட்சியர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, மீதமுள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை இன்று (ஜனவரி 31) இடிக்கும் பணியைத் தொடங்கியபோது, அப்பகுதி மக்கள் வீடுகளை இடிக்கக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும், தாம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா அப்பகுதி மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையிலும், கலைந்துசெல்ல மறுத்த பொதுமக்கள் தொடர்ந்து சாலையில் அமர்ந்து உயர் நீதிமன்றத்துக்கு எதிராகவும் தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர்.
இதனால் அப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
இதையும் படிங்க: 1,000 பேருக்கு மிகாமல் பேரணி நடத்த அனுமதி!