சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் தீவிரமடைந்துவரும் நிலையில், அங்குள்ள இந்தியர்களின் நிலை குறித்து, தமிழ்நாடு அரசு இந்தியத் தூதரகம் வாயிலாக சீன அரசிடம் கேட்டிருந்தது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் கடிதத்திற்கு சீனத் தூதரகம் அனுப்பியுள்ள பதில் கடிதத்தில், “ கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து காப்பாற்றும் வகையில் சீனாவில் உள்ள இந்தியர்கள் தனி இடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர். இந்தியர்களுக்குத் தேவையான உணவு, எரிபொருள் வழங்க உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் நோய் தடுப்புத் தொடர்பான அறிவிப்புகள், வைரஸ் தாக்கப்பட்டால் எந்தெந்த மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும் என்பது தொடர்பாக அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுவருகின்றன.
யுகான் பகுதியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மக்களுடன் இந்தியத் தூதரகம் 24 மணி நேரமும் தொடர்பில் இருக்கிறது. தூதரக அலுவலர்களை 24 மணி நேரமும் தொடர்புகொள்வதற்கு +8618612083629, 8618612083617 ஆகிய எண்களையும் சீன அரசு அறிவித்துள்ளது.
யுகான், பெய்ஜிங், ஹுபட் ஆகிய மாகாணங்களில் உள்ள அனைத்து இந்தியர்களும் பாதுகாப்பாக உள்ளது குறித்து, சீன வெளியுறவுத் துறை அமைச்சர்களிடம் கேட்டறிந்து இந்தியத் தூதரகம் கண்காணித்துவருகிறது “ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4000ஆக உயர்வு!