நாடு முழுவதும் கரோனா நோய்த் தொற்று பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கரோனா தொற்றால் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், கரோனா தடுப்புப் பணிகளுக்காக தொழிலதிபர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் நிவாரண நிதி வழங்கலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி, முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பலரும் தங்களால் இயன்ற தொகையை வழங்கி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தைச் சேர்ந்த ஒன்றாம் வகுப்பு படிக்கும் ஹேமஜெயஸ்ரீ என்ற குழந்தை, தான் சேமித்து வைத்திருந்த தொகையை கரோனா தடுப்புப் பணிகளுக்காக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.
இதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "சிறு வயதிலேயே பிறருக்கு உதவும் உயர்ந்த பண்புடன் நம் குழந்தைகள் வளர்வது மகிழ்ச்சி அளிக்கிறது. கரோனா நிவாரணத்துக்காக, தான் சேமித்து வைத்திருந்த தொகையை வழங்கியுள்ள தஞ்சை திருபுவனத்தைச் சேர்ந்த குழந்தை ஹேமஜெயஸ்ரீக்கு தனது வாழ்த்துகளும் பாராட்டுக்களும்", என்று தெரிவித்துள்ளார்.