கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு உள்பட நாடு முழுவதுமுள்ள 75 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு அறிவுறுத்தியது.
அதைத்தொடர்ந்து தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் கரோனா தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறப்பித்தார். இன்று மாலை 6 மணி முதல் இந்தத் தடை உத்தரவு அமலுக்குவருகிறது.
144 தடை உத்தரவால் அமைப்புசாரா தொழிலாளர்கள் பொருளாதார ரீதியாகப் பெரும் பாதிப்பைச் சந்திப்பார்கள் என்றும் தமிழ்நாடு அரசு அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள்எழுந்தன.
இந்நிலையில், தடை உத்தரவால் பாதிக்கப்படும் மக்களுக்கு 3,280 கோடி ரூபாய் நிவாரண நிதி ஒதுக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டப்பேரவையில் விதி எண் 110இன் கீழ் அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்புகள்:
- நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயுடன் கூடிய விலையில்லா பொருள்களாக அரிசியும் சர்க்கரையும் வழங்கப்படும்.
- ஆட்டோ ஓட்டுநர், தினக்கூலி, கட்டுமான துறை பணியாளர்களுக்கு கூடுதலாக 1000 ரூபாய் வழங்கப்படும்.
- குடும்ப அட்டைதாரர்கள் மார்ச் மாதம் வாங்காத ரேஷன் பொருள்களை ஏப்ரல் மாதம் சேர்த்து வாங்கிக் கொள்ள அனுமதி.
- ஆட்டோ ஓட்டுநர்களுக்காக ஆயிரம் ரூபாய் பணமும் ஒரு கிலோ சமையல் எண்ணெய், ஒரு கிலோ அரிசி வழங்கப்படும்.
- அதேபோல மற்ற மாநிலங்களைைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளர்களுக்கு தலா 15 கிலோ அரிசி, ஒரு கிலோ சமையல் எண்ணெய், ஒரு கிலோ பருப்பு வழங்கப்படும்.
- அம்மா உணவகத்தில் சூடான உணவுகள் தயாரிக்கவும் அதை விரைவாக எடுத்துச் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- ஆதரவற்றோருக்கு உணவு தயாரிக்க மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
- அங்கன்வாடியில் முதியோருக்கான உணவுகள் செய்யப்பட்டு வழங்கப்படும்.
- நடைபாதை வியாபாரிகளுக்கு பொது நிவாரண நிதியுடன் ஆயிரம் ரூபாய் கூடுதலாக வழங்கப்படும்.
- 100 நாள் வேலைத்திட்டத்தில் பணிபுரிவோருக்கு இரண்டு நாள் சிறப்பு ஊதியம் வழங்கப்படும்.
- நகரமுடியாமல் இருப்பவர்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று சுடச்சுட உணவுகள் அளிக்கப்படும்.