தலைமைச் செயலகத்தில் இன்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் நியாயவிலைக் கடைகள் மூலமாக வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களை குடும்ப அட்டைதாரர்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே கொண்டு சென்று விநியோகிக்கும் வகையில் 9 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 3,501 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகளின் சேவையினை துவக்கி வைக்கும் அடையாளமாக 7 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகளின் வாகனங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மேலும், பொது விநியோக திட்டத்தின் கீழ், முன்னோட்ட அடிப்படையில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் செறிவூட்டப்பட்ட ஊட்டச்சத்து நிறைந்த அரிசி வழங்கும் திட்டத்தினை துவக்கி வைக்கும் அடையாளமாக ஆறு குடும்ப அட்டைதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசிப் பைகளையும் அவர் வழங்கினார்.
செறிவூட்டப்பட்ட அரிசியானது இரும்பு, போலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி12 போன்ற நுண்ணூட்ட சத்துகளை கொண்ட ஊட்டச்சத்து மிகுந்த அரிசியாகும்.
இத்திட்டத்தின் கீழ், திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும், ஊட்டச்சத்து மிகுந்த செறிவூட்டப்பட்ட அரிசியானது பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 14,500 மெட்ரிக் டன்னும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் மற்றும் சத்துணவுத் திட்டத்தின் மூலம் 500 மெட்ரிக் டன்னும் 1.10.2020 முதல் வழங்கப்பட உள்ளது. இத்திட்டம் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் மூன்றாண்டுகளுக்கு செயல்படுத்தப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு உணவுத்துறை அமைச்சர் காமராஜ், அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: வைகை அணையிலிருந்து நீர் திறக்க உத்தரவு!