சென்னை: தமிழ்நாட்டில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் அக்டோபர் 1 முதல் பள்ளிக்கு சென்று சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம் என்ற அரசாணையை நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அரசு அறிவித்துள்ள ஊரடங்கு நாளை(செப்.30) முடிவடைவதையொட்டி தலைமைச் செயலகத்தில் இன்று(செப்.29) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். அப்போது கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.
தொடர்ந்து கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர், “ தமிழ்நாட்டில்தான் அதிகளவிலான, அதாவது 182 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுவரை 71 லட்சம் பேருக்கு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல், பள்ளிக்குச் சென்று சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம் என்ற அரசாணை நிறுத்தி வைக்கப்படுகிறது. மாணவர்களின் நலன் கருதி பெற்றோரிடம் கருத்துகளை கேட்டறிந்த பின்பு, மருத்துவக் குழுவுடன் ஆலோசித்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் ” என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து மருத்துவக் குழுவுடனான ஆலோசனைக்குப் பிறகு மாநிலத்தில் இன்னும் தளர்வுகளை அறிவிப்பதா அல்லது மீண்டும் கட்டுப்பாடுகள் விதிப்பதா என்பது குறித்து முதலமைச்சர் அறிவிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஈபிஎஸ் உடனான கூட்டத்தை புறக்கணித்து ஓபிஎஸ் திடீர் ஆலோசனை!