சென்னை: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் செயலாளர் சண்முகநாதனின் பேரன் ஆர். அர்விந்ராஜ் - வி. பிரியதர்ஷினி ஆகியோரது திருமணம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது.
இந்தத் திருமணத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கி, மணமக்களை வாழ்த்தினார். அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், "இந்த மணவிழாவுக்கு தலைமை ஏற்று நடத்தி வைத்து, மணமக்களை வாழ்த்தும் வாய்ப்பு பெற்றமைக்கு மகிழ்ச்சியடைகிறேன்.
சண்முகநாதனுக்கு திருமணம் நடைபெற்ற போது, நானும், என் அண்ணன் அழகிரி உள்ளிட்ட என் குடும்பத்தில் உள்ள சகோதரர்கள் அனைவரும் மாப்பிள்ளைத் தோழர்களாக இருந்து, அந்தத் திருமண விழாவை நடத்தி வைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த அளவுக்கு அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவராக இருந்தார்.
அவரை எல்லோரும் 'குட்டி பி.ஏ, குட்டி பி.ஏ' என்றுதான் அழைப்போம். ஏனென்றால் அவர் முதன்முதலாகப் பணிக்கு வந்தபோது, ஒல்லியான உருவத்தில் இருப்பார். அதனால் அவரை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் செல்லமாக 'குட்டி பி.ஏ' என்றுதான் அழைப்போம்.
1967இல் அண்ணா தலைமையில் ஆட்சிப் பொறுப்பேற்றோம். அப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக கருணாநிதி இருந்தார். அப்போது அவரிடம் சேர்ந்தவர், மறைகிற வரையில் ஒன்றிணைந்தே இருந்தார். தந்தை என்ற முறையில் நாங்கள் பேசியதை விட, கருணாநிதியிடம் சண்முகநாதன் அதிகம் பேசியிருக்கிறார்.
கருணாநிதியும் அவரிடத்தில்தான் அதிகம் பேசியிருக்கிறார். நிறைய திட்டு வாங்குவார். திட்டு வாங்கிவிட்டு, கோபித்துக்கொண்டு இரண்டு நாள் வரமாட்டார். அதற்குப் பிறகு தானாக வந்துவிடுவார். இப்படிப் பல ஊடல்கள் கருணாநிதிக்கும் சண்முகநாதனுக்கும் நடந்திருக்கிறது.
கருணாநிதி மறைந்த பிறகும் தொடர்ந்து கோபாலபுரத்துக்கு வந்து கொண்டிருந்தார். கருணாநிதி இருந்தபோது கோபாலபுரம் வீட்டில் எப்படி வந்து பணிபுரிவாரோ, அதேபோல் அவர் இறந்த பின்னரும் அதே வீட்டின் திண்ணையில் அமர்ந்து பணிபுரிவார். கருணாநிதியின் பேச்சையெல்லாம் அவர் தட்டச்சு செய்யும்போது, நான் போய்ப் பக்கத்தில் உட்கார்ந்து கொள்வேன்.
அதைத் தட்டச்சு செய்து என்னிடம் கொடுத்துப் படிக்கச் சொல்வார். எங்கேயாவது பிழையிருக்கிறதா என்று கண்டுபிடிக்கச் சொல்வார். நான் முழுவதும் படிப்பேன். கருணாநிதியின் பேச்சுகள் எல்லாம் ஊடகங்களுக்குப் போவதற்கு முன்பே, அவர் தட்டச்சு செய்து என்னிடத்தில்தான் காட்டுவார். அதையெல்லாம் இப்போது நினைத்துப் பார்க்கிறேன்" என்று கூறினார்.
இதையும் படிங்க: நெல்லை கல்குவாரி விபத்து: காயமுற்றவர்களுக்கு ஒரு லட்சம் நிவாரணம்