சென்னை: துபாயில் நடைபெறும் (World Expo Exhibition) உலக கண்காட்சியில் மார்ச் 25ஆம் தேதி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு வாரமாக அனுசரிக்கப்பட உள்ளது. இதையொட்டி, உலக எக்ஸ்போ கண்காட்சியில், தமிழ்நாடு அரங்கினை திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (மார்ச்24) இன்று மாலை சென்னை விமானநிலையத்தில் 4.30 மணியளவில் விமானத்தில் துபாய் புறப்பட்டார்.
அங்கு தொழில் துறை, மருத்துவம், சுற்றுலா, கலை, கலாசாரம், கைத்தறி, கைவினைப்பொருட்கள், ஜவுளி, தமிழ் வளர்ச்சி, தகவல், மின்னணுவியல், தொழிற் பூங்காக்கள், உணவுப் பதப்படுத்துதல் போன்ற முக்கியத்துறைகளில் தமிழ்நாட்டின் சிறப்பை உலகிற்கு எடுத்துக்காட்டும் வண்ணம் காட்சிப்படங்கள் இந்த அரங்கில் தொடர்ச்சியாக திரையிடப்படவுள்ளன.
புலம்பெயர்ந்த தமிழர்களுடன் சந்திப்பு: தமிழ்நாட்டிற்கு மேலும், முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அபுதாபிக்கும் அவர் செல்லவுள்ளார். மேலும் அத்துடன், புலம்பெயர் தமிழர்களுடனான சந்திப்புகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தொழில் துறை அமைச்சர், தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஆகியோர் முதலமைச்சர் தலைமையிலான குழுவில் துபாய் புறப்பட்டுச் சென்றனர்.
இதையும் படிங்க: 19 சட்ட மசோதாக்கள் நிலுவை: பழனிவேல் தியாகராஜன்