சென்னை: ஆயிரம் விளக்கில் அமைந்துள்ள தசைத்திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கான நடுநிலைப் பள்ளியின் புதுப்பிக்கப்பட்ட கட்டடத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். 50 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டுள்ள இக்கட்டிடத்தில் மாணவர்களுக்கான இயன்முறை சிகிச்சைக் கூடம் , பெற்றோர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்குவதற்கான அறைகள் உள்ளிட்டவை அமைந்துள்ளன.
முதலமைச்சருக்கு ரோஜா மலர் வழங்கி வரவேற்பு தெரிவித்த தசைத்திறன் குறைபாடுடைய மாணவர்கள், அவருடன் ஆர்வத்துடன் செல்பி எடுத்துக் கொண்டனர். மேம்படுத்தப்பட்ட கூடைப்பந்தாட்ட மைதானத்தை திறந்து வைத்த முதலமைச்சர், சக்கர நாற்காலி வண்டியில் அமர்ந்திருத்த மாணவர்களுடன் கூடைப்பந்து விளையாடினார்.
நீதிக்கட்சி ஆட்சியின்போது இப்பள்ளியில் சர் பிட்டி தியாகராயாவின் முயற்சியில் மாணவர்களுக்கான இலவச மதிய உணவு வழங்கப்பட்டதன் நினைவாக அவரது உருவப்படம் பொறித்த கல்வெட்டை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
சிங்காரச் சென்னை திட்ட நிதியில் 50 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட பள்ளி கட்டடத்தை திறந்து வைத்த முதலமைச்சர் ' நமக்கு நாமே ' திட்டத்தின் மூலம் 6 லட்சம் மதிப்பிலான மாற்றுத்திறனாளிக்கான மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.
பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட 25 லட்சம் மதிப்பிலான தசைத்திறன் குறைபாடு மாணவர்களுக்கான சிறப்பு பள்ளி வாகனத்தையும் முதலமைச்சர் அர்ப்பணித்தார். மின் தூக்கி வசதியுடனான இந்த வாகனம் மூலம் மாணவர்கள் பள்ளிக்கு அழைத்துவரப் பட உள்ளனர். பள்ளி வளாகம் முன்பு காத்திருந்த பொதுமக்கள் பலரும் முதலமைச்சருடன் ஆர்வத்துடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், "இது மிகவும் மகிழ்ச்சியான நாள். இந்த குழந்தைகளுக்கான பெற்றோர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்படுகிறது. 21 மாநகராட்சியில் காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்படும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். முதலமைச்சர் இந்த பள்ளியை பார்த்த உடன் மனதிற்கு பாரமாக இருக்கிறது என தெரிவித்தோடு பெற்றோர்களைச் சந்தித்தும் இந்த அரசு தசை திறன் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பாதுகாப்பாக இருக்கும்” எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்தி பேசுபவர்கள் தமிழ்நாட்டில் பானிபூரி விற்கிறார்களா ? - அமைச்சர் பொன்முடி விளக்கம்