சென்னை: புரெவி புயலின் தாக்கத்தால் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் எடுக்கப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் இன்று (டிச.5) எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், அன்பழகன், விஜயபாஸ்கர், ஜெயக்குமார், தங்கமணி எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர், அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
கடந்த 3 ஆம் தேதி இரவு பாம்பன் - கன்னியாகுமரிக்கு இடையில் ‘புரெவி’ புயல் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்ததைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியது. இதன் காரணமாக பெருமளவில் உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டன.
இப்புயலின் காரணமாக, கடலூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் வீசிய பலத்த காற்றினாலும், பெய்த கன மழையினாலும் ஏற்பட்ட பாதிப்புகளை விரைந்து சீர் செய்யும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இப்புயல் காரணமாக எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாமல் இருக்க, தாழ்வான, கடற்கரையோர, ஆற்றோரங்களில் வசிக்கும் 36,986 நபர்கள் அப்பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டு, 363 நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். இருந்தும் புரெவி புயல் மற்றும் கன மழை காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு தனது இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ள முதலமைச்சர், அவர்களின் குடும்பங்களுக்கு, மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்தும் 4 லட்சம் ரூபாய், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்தும் 6 லட்சம் ரூபாய் என மொத்தம் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ந்து இப்புயல் மற்றும் கன மழை காரணமாக, 37 பசு மாடுகள், 4 எருமை மாடுகள், 4 எருதுகள், 28 கன்றுகள் மற்றும் 123 ஆடுகள் உயிரிழந்துள்ளன. உயிரிழந்த மாடு ஒன்றுக்கு 30,000 ரூபாயும், எருது ஒன்றுக்கு 25,000 ரூபாயும், கன்று ஒன்றுக்கு 16,000 ரூபாயும், ஆடு ஒன்றுக்கு 3,000 ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும்.
புரெவி புயல் காரணமாக 75 குடிசை வீடுகள் முழுமையாகவும், 1,725 குடிசை வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. 8 ஓட்டு வீடுகள் முழுமையாகவும், 410 ஓட்டு வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. சேதமடைந்துள்ள வீடுகளுக்கு உரிய நிவாரண உதவிகள் வழங்கப்படும்.
புரெவி புயல் காரணமாக, சாலையோரங்களில் இருந்த 66 மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. சாலையில் விழுந்துள்ள மரங்கள் மின் ரம்பங்கள் மூலம் வெட்டி, போர்க்கால அடிப்படையில் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.
புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் 27 மின் கம்பங்கள் விழுந்துள்ளன. மின் வயர்கள் சேதமடைந்துள்ளன. மரங்கள் சாய்ந்து விழுந்ததனால் சேதமடைந்த மின் மாற்றிகள் மற்றும் மின் கம்பங்களை சீர் செய்யும் வகையில் மரங்களை அகற்றும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறன.
மின்மாற்றிகள் மற்றும் மின்கம்பங்களைமாற்றியமைக்க கூடுதல் மின்துறை பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில், தொற்று நோயிலிருந்து பொது மக்களை பாதுகாக்கும் வண்ணம், 34 மருத்துவ முகாம்களும், 43 நடமாடும் மருத்துவக்குழுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இது வரை சுமார் 13,556 நபர்கள் இம்மருத்துவ முகாம்கள் மூலம் பயன் பெற்றுள்ளனர்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குன்னூரில் கடும் பனிப்பொழிவு - அவதியில் பொதுமக்கள்