சென்னை: மாமல்லபுரத்தில் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நாளை (ஜூலை.28) முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறுகிறது. இதில் 187 நாடுகளை சார்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதன் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
இந்நிலையில், நாளை நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து நடைபெறும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பங்கேற்க உள்ளனர். மேடை அலங்காரம், வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் அமரும் இடம், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்து கேட்டறிந்தார்.
இந்த நிகழ்வின்போது, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு , பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் செல்வி அபூர்வா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சியினர் போராட்டம்!