சென்னை: உலக அளவிலான 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மகாபலிபுரத்தில் ஜூலை 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டிகள் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி நிறைவடையும். பல்வேறு நாடுகளில் இருந்து செஸ் போட்டியில் வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இப்போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு தரப்பினர் பல வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் விளையாட்டு வீரர்களுக்கு புதுமையான முறையில் வரவேற்பும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். செஸ் போட்டியை பிரபலப்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்களுக்கும் செஸ் விளையாட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை காரப்பாக்கத்தில் செயல்பட்டு வரும் கடலில் நீந்துவதற்கு பயிற்சி அளிக்கும் அரவிந்த் ஸ்குபா நிறுவனத்தின் எஸ்.பி.அரவிந்த் தருண் ஸ்ரீ மற்றும் சிலர், சென்னை நீலாங்கரை கடற்கரையில் தம்பி உடை அணிந்து கடலுக்குள் 60 அடி ஆழத்தில் சென்று செஸ் விளையாடி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். நம்ம சென்னை போஸ்டரும் வைத்திருந்தனர்.
செஸ் வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கடலுக்குள் செஸ் விளையாட்டு போட்டி சென்னையில் முதல்முறையாக நடத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:செஸ் ஒலிம்பியாட்: 3 வது சுற்றிலும் இந்திய அணிகளின் தொடர் வெற்றி!