செக் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை செய்து, மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, புகார்தாரர் தாக்கல் செய்த மனுவை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ், செக் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை செய்து மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அமர்வு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டுமா? அல்லது உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டுமா? என்ற சட்டக் கேள்வியை எழுப்பி, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் விசாரணைக்கு பரிந்துரைத்தார்.
இதனையடுத்து, நீதிபதிகள் சுந்தரேஷ், பாரதிதாசன் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் கொண்ட அமர்வை அமைத்து தலைமை நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகள் அமர்வு, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, தனிநபர் புகார்களின் அடிப்படையில் தொடரப்படும் செக் மோசடி போன்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவரை, மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விடுதலை செய்தால், அந்த தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தான் மேல் முறையீடு செய்ய முடியும் எனத் தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை செய்து மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமர்வு நீதிமன்றம் உறுதி செய்து, அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களை மேல் முறையீட்டு மனுக்களாக கருத வேண்டும் எனவும், இந்த சீராய்வு மனுக்களை மேல் முறையீட்டு மனுக்களாக மறு எண்ணிட்டு பட்டியலிடும்படி, பதிவுத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: காய்கறி, பழங்களை பதப்படுத்த 'உணவு சங்கிலி மேலாண்மை' திட்டம்