சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பில் இறுதியாண்டு மாணவர்களுக்கு செப்டம்பர் 21ஆம் தேதி முதல் 25ஆம் தேதிவரை தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வினை இளங்கலை, முதுகலை இறுதியாண்டு மாணவர்களும், ஏற்கனவே இறுதி பருவத்தில் அரியர் வைத்துள்ள மாணவர்களும் என சுமார் 65 ஆயிரம் மாணவர்கள் எழுதினர்.
மாணவர்களுக்கான வினாத்தாள்கள் அவர்களுக்குரிய தனிப்பட்ட இணையதளப் பக்கத்திற்கு அனுப்பப்பட்டது. மாணவர்கள் ஏ 4 தாளில் தேர்வினை 18 பக்கத்திற்குள் எழுதி ,மீண்டும் இணையதளத்தில் விடைத்தாள்களை பதிவேற்றம் செய்தனர்.அவ்வாறு வசதிகள் இல்லாதவர்கள் கல்லூரிகளுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் அனுப்பி வைத்தனர்.
இவர்களுக்கான தேர்வு முடிவுகள் சென்னை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் இன்று மாலை ஆறு மணிக்கு வெளியிடப்படுகிறது.தேர்வர்கள் www.results.unom.ac.in மற்றும் http://egovernance.unom.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இளங்கலைப் பாடப்பிரிவில் தேர்வு எழுதியவர்களில் 98 விழுக்காட்டினரும், முதுகலை பாடப்பிரிவில் தேர்வு எழுதியவர்களில் 99 விழுக்காட்டினரும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என சென்னை பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் தெரிவித்தார்.