சென்னை: தமிழ்நாட்டில் கடந்தாண்டு 55 ஆயிரம் சாலை விபத்துகளில் சிக்கி 14 ஆயிரத்து 250 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, சென்னையில் 1,026 பேர் உயிரிழந்துள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது. சாலை விபத்துகளை குறைப்பதற்காக போக்குவரத்து காவல் துறை பல்வேறு வகைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
குறிப்பாக, போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காமல் இருப்பதாலேயே விபத்து ஏற்படுகிறது. அந்த வகையில், சென்னை போன்ற பெரு நகரங்களில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தி ஒழுங்குமுறைக்கு கொண்டு வருவது என்பது சிரமமான ஒன்று. ஆனால், சென்னை போக்குவரத்து காவல் துறை இந்த சவாலான பணிகளை தினமும் செய்து வருகிறது.
வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பான துண்டு பிரசுரங்கள் வழங்குதல், ஒலிபெருக்கி மூலமாக விழிப்புணர்வு வழங்குதல், நடனமாடும் நிகழ்ச்சி வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என பல வகைகளில் சென்னை போக்குவரத்து காவல் துறை விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை சிக்னலில் பெரியமேடு போக்குவரத்து காவல்துறையினர் இசைஞானி இளையராஜா இசையோடு சேர்த்து போக்குவரத்து விழிப்புணர்வு அறிவிப்பை ஒலி பெருக்கி மூலம் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கடலூர்: சாலை மறியலில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி