சென்னை: முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் சென்னை முழுவதும் 312 வாகன தணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டு 10 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அத்தியாவசிய பணிகளுக்கு செல்வோர் தவிர மற்ற யாருக்கும் அனுமதி இல்லையென காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தி.நகர் பேருந்து நிலையம் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது மாருதி ஈகோ வாகனம் ஒன்று வந்துள்ளது.
ஓட்டுனரிடம் போலீசார் கேட்ட போது முன்னுக்குப்பின் முரணாக ஓட்டுநர் பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வாகனத்தை சோதனை செய்து பார்த்தபோது அதில் 90 கிலோ தங்கம் மற்றும் தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து 90 கிலோ தங்கம் மற்றும் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், வாகன ஓட்டுநரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
நகைக்கடை தங்கம்
தகவலறிந்து மெட்ராஸ் ஜுவல்லர்ஸ் அசோசியேஷன் நிர்வாகிகள் ஐந்து பேர் காவல் நிலையம் சென்றனர்.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், "பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் முறையாக வெளிநாடுகளிலிருந்து லாஜிஸ்டிக்ஸ் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட தங்கம் எனவும்" மேலும், "தங்கத்திற்கு உரிய ஆவணங்கள், லாஜிஸ்டிக்ஸ் ரசீதுகள், இறக்குமதி செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் உள்ளதாகவும்" போலீசாரிடம் தெரிவித்தனர்.
போலீசார் விசாரணையில் தங்கத்திற்கு உரிய ஆவணங்கள் இருந்ததால் பறிமுதல் செய்த 90 கிலோ தங்கத்தை மீண்டும் மெட்ராஸ் ஜூவல்லர்ஸ் அசோசியேஷன் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர்.
தங்கத்தை பெற்றுக்கொண்ட மெட்ராஸ் ஜூவல்லர்ஸ் அசோசியேஷன் செயலாளர் சாந்தகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் கூறுகையில், "சங்கத்தின் சார்பாக 30க்கும் மேற்பட்ட நகைக்கடை உரிமையாளர்கள் ஒன்றிணைந்து இந்த தங்கத்தை இறக்குமதி செய்ததாகவும், அவற்றுக்கான உரிய ஆவணங்களை கொடுத்த பின்னர் போலீசார் தங்களிடம் தங்கத்தை ஒப்படைத்ததாகவும்" தெரிவித்தார்.
இதையும் படிங்க:Madurai Curfew: ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கால் தூக்கம் கொண்ட 'தூங்கா நகரம்'