சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவு:
அனைத்து தரப்பினரும் பொதுக்குழு கூட்டத்தை நடத்த எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை.
இருப்பினும் ஒருங்கிணைப்பாளரும், மற்ற மனுதாரர்களும் கட்சி விதிகளை திருத்தம் செய்ய, குறிப்பாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைப்பது தொடர்பான தீர்மானங்களை நிறைவேற்றவே எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதற்கான முகாந்திரத்தை நிரூபிக்கவில்லை. இதுபோன்ற தீர்மானம் நிறைவேற்றப்படும் என்ற அச்சத்தின் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பொதுக்குழு கூட்டத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த நீதிமன்றம் யூகித்து முன்கூட்டியே உத்தரவு பிறப்பிக்க முடியாது.
கட்சி மற்றும் சங்க விவகாரங்களில் நீதிமன்றம் பொதுவாக தலையிடுவதில்லை. நிர்வாக வசதிக்காக சட்ட திட்டங்களை கட்சியால் திருத்தம் செய்ய முடியும்.
பொதுக்குழுவில் என்ன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை முடிவு செய்வது கட்சிதான். அதில் நீதிமன்றம் தலையிட முடியாது.
அதனால் எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க நீதிமன்றம் விரும்பவில்லை.
வழக்கில் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் பதிலளிக்க வேண்டும்.
வழக்கு ஜூலை 11ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு: நீதிமன்றத்தில் ஈபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பு காரசார வாதம்: முழுப்பின்னணி!