சென்னை: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியவர்களை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்க மருத்துவர்கள், தன்னார்வலர்கள் (Chennai Volunteers) அடங்கிய தொண்டு நிறுவனம் சார்பில் சுமார் 150 பயிற்சி பெற்ற தொலைப்பேசி அழைப்பாளர்கள் கொண்ட குழுக்களை மாநகராட்சி உருவாக்கியது.
இந்தத் தொலைப்பேசி அழைப்பாளர்கள் மூலம் வீடு திரும்பிய நபர்களைத் தொடர்பு கொண்டு தலைவலி, உடல் வலி, உடல் சோர்வு, தூக்கமின்மை, இருமல், சுவாசப் பிரச்சினைகள் உள்ளிட்ட ஏதேனும் அறிகுறிகள் உள்ளதா என்பதைத் தெரிந்து கொண்டு, அறிகுறிகள் இருந்த நபர்களுக்குத் தொடர்பு மைய தொலைப்பேசி வழியாக மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.
அப்படி, இதுவரை 1,29,712 பேருக்கு தொலைப்பேசி வாயிலாக மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. அதில் ஒரு சில தொற்று அறிகுறிகளுடன் இருந்த 5,874 நபர்களுக்கு VidMed, வாட்ஸ் ஆப் செயலிகள் மூலம் காணொலி அழைப்பில் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.