கரோனா தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுத்துவருகின்றது. அதன் ஒரு பகுதியாக, ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கை அறிவித்துள்ளது.
முழு ஊரடங்கு காலத்தில் உணவகங்களுக்கு நேர கட்டுப்பாடு உடன் பார்சலுக்கு மட்டும் தமிழ்நாடு அரசு அனுமதித்துள்ளது. இந்நிலையில், அரசால் இயங்கும் அம்மா உணவகம் வழக்கம்போல் இயங்கும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்மா உணவகத்தில் ஏழை, எளிய மக்கள், கூலித் தொழிலாளர்கள், சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் தரமான உணவு வழங்கப்பட்டு வருகிறது.
காலை இட்லி, மதியம் கலவை சாதம், இரவு சப்பாத்தி என வழங்கி வருகிறது. நாளை முழு ஊரடங்கு என்பதால் சில உணவகங்கள் மட்டுமே திறந்து இருக்கும். அதனால், சென்னையில் உள்ள 407 அம்மா உணவகத்தை வழக்கம் போல் இயக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
நாளை முழு ஊரடங்கின் காரணமாக வழக்கத்தை விட அதிகம் பேர் சாப்பிட வருவார்கள் என்பதால் கூடுதலாக உணவு தயாரிக்கவும் மாநகராட்சி அலுவலர்கள் ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக மாநகராட்சி அலுவலர் கூறுகைையில், " நாளை வழக்கம் போல் அனைத்து அம்மா உணவகமும் செயல்படும். முழு ஊரடங்கின் காரணமாக வழக்கத்தை விட அதிகம் பேர் சாப்பிட வர வாய்ப்பு உள்ளது.
அதனால் கூடுதலாக உணவு தயாரிக்க ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். மேலும் உள்ளே வருவதற்கு முன் முகக்கவசம் அணிந்து இருப்பதை உறுதி செய்யவும், வெளியில் கிருமிநாசினி வைக்கவும் அறிவுறுத்தியுள்ளோம்" என தெரிவித்தார்.