சென்னை: திருவொற்றியூர் நடராஜன் கார்டன் பகுதியில் உள்ள மூன்று தெருக்களில் கடந்த 27ஆம்தேதி அதிகாலையில் சாலை போடும் பணி நடக்க இருந்தது.
அப்போது, அங்கு தனது ஆதரவாளர்களுடன் வந்த திருவொற்றியூர் தொகுதி திமுக எம்எல்ஏ கே.பி.சங்கர், சாலை பணியில் இருந்த மாநகராட்சி பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.
ஜல்லி கலவையை திருப்பி அனுப்பிய எம்எல்ஏ
மேலும், பேச்சுவார்த்தை நடத்திய மாநகராட்சி உதவி பொறியாளரை எம்எல்ஏ சங்கர் தாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சென்னை திருவொற்றியூர் மண்டலத்தில் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மூன்று தெருக்களில் மட்டும் ரூ. 30 லட்சம் செலவில் பணி நடந்து வருகிறது. இதற்காக, 13 லாரிகளில் சாலைகளில் கொட்டுவதற்காக ஜல்லி கலவை கொண்டு வரப்பட்டது. இதனை எம்எல்ஏ சங்கர், அவரது ஆதரவாளர்களும் திருப்பி அனுப்பியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு அதிமுக உள்பட எதிர்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
ககன்தீப் சிங் பேடி புகார்
இவ்விவகாரம் தொடர்பாக பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் கிளம்பியுள்ளது. இதையடுத்து திருவொற்றியூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.சங்கர் கழகக் கட்டுப்பாட்டை மீறி வருவதால், திருவொற்றியூர் மேற்குப் பகுதிக் கழகச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என்று திமுக தலைமை அறிவித்தது. சென்னை மாநகராட்சி அலுவலர்கள் இந்த சம்பவம் குறித்து துறை ரீதியிலான விசாரணை நடத்தினர்.
தாக்கப்பட்ட மாநகராட்சி உதவி பொறியாளர், அவரது உதவியாளர் ஆகியோரிடம் துறை ரீதியிலான விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, எம்எல்ஏ சங்கர் மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்ககோரி சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கடிதம் மூலமாக புகார் கொடுத்துள்ளார்.
தனித்தனியாக விசாரணை
சென்னை மாநகராட்சி உதவி பொறியாளரை தாக்கியது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு கடிதம் மூலம் சென்னை மாநகராட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, புகார் குறித்து திருவொற்றியூர் காவல் துறையினர் விசாரணையை தொடங்க உள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான மாநகராட்சி உதவி பொறியாளர் மற்றும் சம்பவம் நடைபெற்றபோது யாரெல்லாம் அங்கு இருந்தார்கள் என்பதை கண்டறிந்து அவர்களிடம் தனித்தனியாக திருவொற்றியூர் காவல் துறையினர் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: லிஃப்டில் பெண்ணிடம் இளைஞர் அத்துமீறல்!