சென்னை ஒமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில், தனியார் தொண்டு அமைப்பு சார்பில் பத்தாயிரம் சதுரடியில் மியாவாக்கி அடர்வனம் உருவாக்குவதற்காக செடிகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், நடிகர் விவேக் ஆகியோர் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், "சென்னையில் தற்போது உள்ள 675 பூங்காக்கள் ஆயிரமாக உயர்த்த திட்டம் உள்ளது. முதற்கட்டமாக நடப்பு நிதியாண்டில் 60 பூங்காக்கள் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. மியாவாக்கி முறையில் மரம் நடுவது மூலம் சென்னையின் வெப்பம் ஒரளவு கட்டுப்படுத்த முடியும். பொதுமக்களுக்கு ஆரோக்கியமான காற்றும் சுகாதாரமான சூழலும் இது உருவாக்கும்.
சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மூலம் மாநகராட்சி சார்பில் கூவம் நதியின் இரு கரைகளிலும், நேப்பியர் பாலம் தொடங்கி பருத்திப்பட்டு வரை 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நாட்டு மரங்கள் நடும் பணி விரைவில் தொடங்க உள்ளது. மேலும் வெர்ட்டிகள் கார்டெனிங் (vertical gardening) என்ற முறையில் சென்னையில் உள்ள அனைத்துப் பாலங்களுக்கும் அடியில் அமைக்க உள்ளோம். இதற்கு சென்னை மெட்ரோ உடன் இணைத்து கழிவுநீரை சுத்தம் செய்த தண்ணீரை அதற்கு விடுவோம்" எனத் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து பேசிய சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளார் ராதாகிருஷ்ணன், "ஐஐடியில் இன்று (டிச. 19) 106 பேருக்கு பரிசோதனை செய்ததில் ஒருவருக்கு மட்டுமே கரோனா தொற்று இருந்தது, அண்ணா பல்கலைக்கழகத்தில் 279 பேருக்கு பரிசோதனை செய்ததில் ஒருவருக்கு மட்டுமே கரோனா தொற்று இருந்தது. ஒரு வகையில் இது நல்ல விசயமாக இருந்தாலும் அனைவரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
தொற்று அறிகுறிகள் இல்லாமல், வெறும் சந்தேகம் இருந்தாலும், இலவசமாக அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துகொள்ளுங்கள் எனக் கேட்டுக்கொண்டார். தனியார் கல்லூரிகளில் நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் மிக குறைந்த அளவிலான தொற்று பாதிப்பு உள்ளது தெரியவந்துள்ளது. சென்னையில் மாநகராட்சி சார்பில் செய்யப்படும் கரோனா பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கபட்டுவருகின்றன" எனத் தெரிவித்தார்
பின்னர் நடிகர் விவேக் பேசுகையில், “தற்போது செடிகள் நட்டது மூலம் 2,000 மருத்துவர்கள் ஒமந்தூரார் மருத்துவமனையில் இணைந்துள்ளனர். கரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. அதேபோல், அரசு மருத்துவர்கள் சிறப்பான சிகிச்சை அளிக்கின்றனர் அந்த அர்ப்பணிப்புக்கு எனது நன்றி" எனக் கூறினார்.
இதையும் படிங்க...பொதிகை, நெல்லை ரயில் பெயர்களை யார் சொல்லி மாற்றினீர்கள்?